நல்லதொரு திறமையான கலைஞன் மறைந்துவிட்டார் என பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

சோகத்தில் ஆழ்த்திய மரணம்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், திடீரென்று தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மரணத்திற்கான காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல முன்னணி பிரபலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக மும்பை மற்றும் பாட்னா என இரு மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரியா மீது புகார்

இதனிடையே, சுஷாந்த்தின் தந்தை கே.கே. சிங் பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜீவ் நகர் காவல் நிலையத்தில் சுஷாந்தின் காதலி ரியா சக்ரபோர்த்தி உள்ளிட்ட 6 பேர் மீது சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக புகார் அளித்தார். மேலும் ரியா சுஷாந்த் சிங்கிடம் பண மோசடி செய்ததாகவும் அந்தப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து வழக்குப்பதிவு செய்துள்ள பாட்னா போலீசார், இந்த வழக்கு விசாரணைக்காக மும்பையில் ஏற்கனவே முகாமிட்டுள்ளனர். சுஷாந்த் மரண வழக்கில் பாட்னா போலீசாருக்கு மும்பை போலீசார் உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று பரவலான குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், சுஷாந்த் வழக்கு தொடர்பான விசாரணைக்காக பாட்னா நகர காவல் கண்காணிப்பாளர் வினேய் திவாரி தலைமையிலான சிறப்பு போலீஸ் குழு மும்பை சென்றது. அப்போது மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அவர்களை தனிமைப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

நீதிபதி கருத்து

இதனிடையே, பீகார் மாநிலத்தில் விசாரிக்கப்படும் வழக்கை மும்பைக்கு மாற்றக் கோரி சுஷாந்த் சிங்கின் காதலி ரியா சக்ரபோர்த்தி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது சுஷாந்த் சிங் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐக்கு பரிந்துரைக்க பிகார் அரசு முடிவு செய்ததை ஏற்றுக்கொள்வதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பேசிய நீதிபதி ரிஷிகேஷ் ராய், சுஷாந்த் மரணம் துரதஷ்டவசமானது என்றார். திறமையான கலைஞன் அசாதாரணமான சூழலில் மரணமடைந்துவிட்டதாகவும், சட்டத்தின்படியே வழக்கை விசாரிக்க முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here