ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் அனைத்து விதமான பணிகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்வெளி ஆய்வு மையம்

இஸ்‌ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் செயல்பட்டு வருகிறது. இங்கு பணியாற்றுபவர்கள், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூலூர்பேட்டையில் இருக்கும் குடியிருப்புகளில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் சுவர்ணமுகி நகரில் உள்ள குடியிருப்பில் வசிக்கும் 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இவர்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள திட உந்துவிசை விண்வெளி பூஸ்டர் ஆலையில் தொழில்நுட்ப வல்லுனர்களாக பணியாற்றி வருகின்றனர்.

பணியாளர்களுக்கு கொரோனா

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பணியாளர்கள் உடனடியாக நெல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், ஒரு பணியாளரின் மனைவி மற்றும் மகனுக்கும் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று ஏற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து பணியில் இருந்ததால் அது மற்றவர்களுக்கும் பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் பணியாற்றிய இடம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்தது. இந்நிலையில், கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மறு உத்தரவு வரும் வரை சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் ஆய்வுப்பணிகள் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீர், மின்சாரம், தீயணைப்பு தவிர அனைத்து சேவைகளும் நிறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் நிறுத்தம்

இதுகுறித்து விண்வெளி ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சதீஷ் தவான் விண்வெளி மைய வீட்டுவசதி குடியிருப்பில் கோவிட் -19 நேர்மறை வழக்குகளை கண்டறிவதைக் கருத்தில் கொண்டு, சதீஷ் தவான் விண்வெளி மையம் குறைந்தபட்ச அத்தியாவசிய ஊழியர்களுடன் உடனடி நடைமுறையுடன் மட்டுமே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்வெளி மைய இயக்குநருடன் நிறுவன தலைவர்கள் கலந்தாலோசித்த பிறகு அத்தியாவசிய, முக்கியமான நடவடிக்கைகள் என்ன என்பது தீர்மானிக்கப்படும் என்றும் அத்தியாவசிய சேவைகளைத் தவிர அனைத்து ஊழியர்களும் வீட்டிலிருந்தே பணிபுரிவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here