மகளின் திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு மணமேடையில் நடிகை ஆஷா சரத் நடனம் ஆடி விருந்தினர்களை வரவேற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
பட்டம் வென்ற மகள்
பாபநாசம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ஆஷா சரத். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகளான உத்தாரா 2021 ஆம் ஆண்டு மிஸ் கேரளா பட்டத்தை வென்றார். கடந்தாண்டு வெளியான கெத்தா படத்தின் மூலம் நடிகையாகவும் அறிமுகமானார். இந்நிலையில் உத்தாராவுக்கும், ஆதித்யா மேனன் என்பவருக்கும் மார்ச் 18 ஆம் தேதி கொச்சியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. இதில் மலையாள நடிகையான காவியா மாதவன், நடிகர் லால் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த திருமண வீடியோவை ஆஷா சரத் தன் யூட்டியூப் சேனலில் பகிர்ந்துள்ள நிலையில், புதுமணத் தம்பதிக்கு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கவர்ந்த நடனம்
ஆஷா நடிகை மட்டுமில்லாமல் ஒரு பரதநாட்டிய கலைஞரும் ஆவார். திருமண நிகழ்ச்சிகள் தொடங்கும் முன்பு மணமேடையில் நடிகை ஆஷா சரத் நடனம் ஆடினார். விருந்தினர்களை வரவேற்கும் விதமாக அவர் நடனமாடியது பார்ப்பவர்களை மிகவும் கவர்ந்தது. மேலும் அவரை கைதட்டி உற்சாகப்படுத்தினர். ஆஷா வெளியிட்டுள்ள திருமண வீடியோவில் அவர் நடனமாடியதை பார்த்து ரசிகர்கள் ஆஷா சரத்தை புகழ்ந்து வருகின்றனர். மலையாளத்தில் வெளியான திருஷ்யம் படத்தில் போலீஸ் அதிகாரியாக மிரட்டிய ஆஷா சரத்தின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால் அதன் ரீமேக் படமான பாபநாசம் படத்திலும் அவரே போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஆஷா சரத் கமலஹாசனுடன் தூங்காவனம் படத்திலும் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.