உடல்நிலை சரி இல்லாமல் இருக்கும் தயாரிப்பாளர் வி.ஏ துரைக்கு உதவி செய்ய முன் வந்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
கஷ்டப்படும் தயாரிப்பாளர்
இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா, லைலா, சங்கீதா உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் தான் பிதாமகன். இந்த படத்தை தயாரித்த வி.ஏ துரை சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அன்றாட செலவுக்கு கூட காசு இல்லாமல் தவித்து வருகிறார். இவர் என்னம்மா கண்ணு, லூட்டி, கஜேந்திரா உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர். ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படத்திலும் எக்ஸிக்யூட்டிவ் ப்ரொடியூசராக பணியாற்றியவர்.
உதவும் பிரபலங்கள்
சமீபகாலமாக வி.ஏ துரை நீரிழிவு நோயால் அவதிப்பட்டு வருகிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர், சிகிச்சைக்கு பணமில்லாமல் உதவி வேண்டி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். உடல் மெலிந்து அன்றாட மருத்துவ செலவுக்கே பணம் இல்லாமல் தவித்து வரும் தயாரிப்பாளர் வி.ஏ துரைக்கு, நடிகர் சூர்யா ரூ.2 லட்சம் பணம் கொடுத்து உதவினார். அது மட்டுமில்லாமல் நடிகர் கருணாஸ் ரூ.50 ஆயிரம் நிதி கொடுத்து உதவியுள்ளார். மருத்துவ சிகிச்சைக்காக நடிகர் ராகவா லாரன்ஸும் ரூ.5 லட்சம் வரை வழங்குவதாக அறிவித்துள்ளார். தற்போது தொலைபேசியின் மூலம் நலம் விசாரித்த நடிகர் ரஜினிகாந்த், எதற்கும் கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக் கொள்கிறேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். படப்பிடிப்பு முடிந்ததும் நேரில் சந்திப்பதாகவும் ரஜினிகாந்த் அவரிடம் கூறியுள்ளார்.