வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள் நாட்டிற்கு எதிரானவர்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
வடமாநில தொழிலாளர் பிரச்சினை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது; “வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் இது. இதனை நம்மை விட வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வந்து வாழும் மக்களே அழுத்தமாகச் சொல்வார்கள். தனியார் தொலைக்காட்சி நடத்திய விவாத மேடையில் பேசிய வடமாநிலத்துப் பெண் ஒருவர் பேசிய பேச்சு ஒன்று, சமூக ஊடகங்களில் சமீபத்தில் அதிகம் பரவியது. ”வாய் பேச முடியாத தனது குழந்தையைத் தூக்கிக் கொண்டு தமிழகத்திற்கு வாழ வந்த நான், ரேஷன் கார்டு பெற்று, அதன் மூலமாக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், பல இலட்சம் ரூபாய் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாகச் செய்து வைத்தேன். இப்போது என் குழந்தை பேசுகிறது. இதற்கு தமிழகம் தான் காரணம்” என்று அளித்த பேட்டியானது யாராலும் மறக்க முடியாதது.
கருணைத் தொட்டில்
தாய்த் தமிழகம் என்பது மனித குலத்துக்கு மகத்தான உதவி செய்யும் கருணைத் தொட்டிலாகவே எப்போதும் இருந்துள்ளது. இனியும் அப்படித்தான் இருக்கும். வர்த்தகத்திற்காக, தொழிலுக்காக, மருத்துவத்துக்காக, கல்விக்காக,வேலைக்காக என பல்வேறு மாநில மக்கள் தமிழகத்திற்கு வருவது காலம் காலமாகத் தொடர்ந்து வருகிறது. அவர்கள் தாங்களும் உயர்ந்து, தமிழகத்தையும் உயர்த்தி இருக்கிறார்கள். சமீப காலமாக வேலை வாய்ப்புகளைத் தேடி அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் தமிழகத்திற்கு வருவது அதிகரித்து வருகிறது. சேவைத் துறைகள், கட்டுமானம், சிறு மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் என பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை வழங்கும் வகையில் தமிழ்நாடு திகழ்வது தான் இதற்குக் காரணம். தமிழ்நாட்டிற்குச் சென்றால் வேலை கிடைக்கும், அமைதியான வாழ்க்கை அமையும் என்பதே இங்கு பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் வருவதற்குக் காரணமாகும். இவ்வாறு நம்பிக்கையோடு வருகை தரும் அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு செய்து தருவதோடு, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு உரிய சலுகைகளையும், பாதுகாப்பினையும் உறுதி செய்து வருகிறது.
அரசு உதவி
கொரோனா இரண்டாவது அலையின் போது சொந்த மாநிலங்களுக்குத் திரும்பச் செல்ல விரும்பிய வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவி செய்யும் வகையில், மாவட்டம்தோறும் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் இணைந்து அந்த தொழிலாளர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு. இவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாமுக்கு நானே சென்று பார்த்து, அவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தரப்பட்டதை உறுதி செய்தேன். அதேபோல், குடும்ப அட்டை இல்லாத, வேலைகளை இழந்த 1 இலட்சத்து 29 ஆயிரத்து 440 புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 15 கிலோ அரிசி, 1 கிலோ துவரம்பருப்பு, ஒரு வழங்கப்பட்டது.
எண்ணம் ஈடேறாது
அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கு, பணிக்காலத்தில் ஏற்படும் விபத்து இழப்பீடாக இதுவரை ரூபாய் 6.27 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து புலம்பெயர் தொழிலாளர்களும் தங்களது பெயர்களை பதிவு செய்ய வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படி வெளிமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் கனிவோடு நாங்கள் கவனித்து வருகிறோம். இந்த அமைதிமிகு சூழ்நிலையைக் காணப் பொறுக்காத சிலர், அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கில், தமிழ் மக்களின் பண்பாட்டினை அவமதிக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு, சில குறுமதியாளர்கள் முயற்சி செய்கிறார்கள். அவர்களது எண்ணம் ஈடேறாது. இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் இங்கு நிலவும் இயல்பான சூழ்நிலை தெரியும். அதனால்தான், தற்போதும் வெளிமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குத் தொழிலாளர்கள் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை தமிழ்நாடு எப்போதும் போல் வரவேற்கின்றது.
கடும் நடவடிக்கை
வேறு மாநிலங்களில் நடைபெறும் சம்பவங்களையும், வீடியோக்களையும், படங்களையும் தமிழ்நாட்டில் நடைபெற்றதாக வேண்டுமென்றே வதந்தி பரப்பி, அச்சத்தையும் பீதியையும் பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வெளிமாநிலத் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வதந்திகளைப் பரப்புபவர்கள், இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள். நாட்டின் ஒருமைப்பாட்டிற்குக் குந்தகம் விளைவிப்பவர்கள். இல்லாத ஒரு பிரச்சினையை வைத்து, இப்படிக் கீழ்த்தரமாக சிலர் அரசியல் செய்வது கடும் கண்டனத்திற்குரியது. வடமாநிலத் தொழிலாளர் தோழர்கள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம். அப்படி யாராவது உங்களை அச்சுறுத்தினால் காவல் துறையின் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தகவல் தாருங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன். இங்குள்ள அனைத்து மாநிலத் தொழிலாளர்களுக்கும் அரணாக இந்த அரசும், தமிழ்நாட்டு மக்களும் இருப்பார்கள் என்பதை இங்குள்ள தொழிலாளர் சகோதரர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்வதோடு. தவறான செய்திகளின் அடிப்படையில் நீங்கள் எவரும் எவ்வித அச்சமும் கொள்ள வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதலமைச்சர் மு,க,ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.