கடலுார், நாகை, திருவாரூர் உள்ளிட்ட தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

கனமழை

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று (நவ., 25) கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலுார், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடியுடன் மழை

நாளை (நவ., 26) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை மறுதினம் (நவ., 27) முதல் 01.12.2023 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

27 ஆம் தேதி தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 28 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here