தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் இயல்பைவிட 2 – 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிதமான மழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது; “மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக இன்று முதல் 17 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 18 மற்றும் 19 ஆம் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வெப்பம் அதிகரிக்கும்

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40 – 41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 – 30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப் பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் இலங்கை கடலோரப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பலத்தக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப் படுகிறார்கள்”. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here