தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காற்றழுத்த தாழ்வுப் பகுதி

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது; “தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வளிமண்டல சுழற்சி மேலும் வலுப்பெற்று குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாறியது. இது அடுத்த 48 மணி நேரத்திற்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று வரும் 12ம் தேதிக்குள் வடமேற்கு தமிழ்நாடு புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து வரக்கூடும்.”

கனமழை

இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை தொடரும். இன்று (09.11.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (10.11.2022) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், சிவகங்கை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இடி மின்னலுடன் மழை

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் காரைக்கால் 6 செ.மீ., திருவாரூர் மாவட்டம் குடவாசல், மன்னார்குடி, வில்லிவாக்கம் தலா 5 செ.மீ., திண்டுக்கல், காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக்குப்பம், மணிமுத்தாறு, மயிலாடுதுறை, பாபநாசம், திருவாரூர், நீடாமங்கலம், பாண்டவையார், தரங்கம்பாடி, பள்ளிக்கரணை பகுதிகளில் தலா 4 செ.மீ., சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், ஆயின்குடி, பெரம்பூர், பரங்கிப்பேட்டை, மணல்மேடு, அயனாவரம் தாலுகா அலுவலகம், செட்டிகுளம், கொள்ளிடம் ஆகிய பகுதிகளில் தலா 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

இன்று (09.11.2022) மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். 10-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப் பகுதிகள், தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here