சமூக வலைதளம் மூலம் ரசிகர் கேட்ட கேள்விக்கு பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா மன்னிப்பு கேட்டுள்ளார்.
பிஸி நடிகை
கன்னடத்தில் ‘கிரிக் பார்ட்டி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கில் ‘கீதா கோவிந்தம்’, ‘தேவதாஸ்’ போன்ற படங்களில் நடித்த இவருக்கு, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து ‘டியர் காம்ரேட்’, ‘புஷ்பா’ போன்ற வெற்றிப் படங்களை கொடுத்தார். திரையுலகில் வேகமாக வளர்ந்து வரும் ராஷ்மிகா, தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விஜய்யுடன் ‘வாரிசு’ படத்தில் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சினிமாவிற்கு வந்த சில ஆண்டுகளிலேயே ஒரு முன்னணி நடிகையாக உருவெடுத்து பல ரசிகர்களைப் பெற்றுள்ளார் ராஷ்மிகா.
மன்னிப்பு கேட்கிறேன்
விஜய் தேவரகொண்டாவுடன் நடித்த படங்களின் புரமோஷன் சென்னையில் நடந்த போது அதில் கலந்துகொண்ட ராஷ்மிகா மந்தனா, அதன்பிறகு தான் நடித்த தெலுங்கு படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள் சென்னையில் நடக்கும் போது அதில் கலந்துகொள்ளவில்லை. இதுதொடர்பாக சமூக வலைதளம் மூலம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ராஷ்மிகா பதிலளிக்கையில்; பல கமிட்மெண்டுகள் இருந்த காரணத்தால் அந்த படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயலவில்லை. அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் இப்போது பல தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருவதால் இனிவரும் காலங்களில் என்னை சென்னையில் நடைபெறும் எனது படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பார்க்க முடியும். நான் சொல்வதை நம்புங்கள். இவ்வாறு நடிகை ராஷ்மிகா மந்தனா கூறியிருக்கிறார்.