கிராமப்புற வாழ்க்கையை கண்முன் கொண்டு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிக்க காத்திருக்கிறது “அம்முச்சி சீசன் 2”.

சீசன் 2

OTT தளங்களின் வரவில் எண்ணற்ற தொலைத்தொடர்கள் வெளிவந்தாலும், அவற்றில் சொற்ப எண்ணிக்கையிலான தொடர்கள் மட்டுமே அனைத்து தரப்பிலும் ரசிகர்களை கவர்கின்றன. அந்த வகையில் “அம்முச்சி” தொடர் முதல் சீசனில் பலரின் இதயங்களை வென்றது. நக்கலைட்ஸ் YouTube சேனலால் உருவாக்கப்பட்ட இந்தத் தொடர், தமிழகம் மட்டுமின்றி, உலகம் முழுவதுமுள்ள தமிழ் பேசும் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்றது. இப்போது அந்தகுழு “அம்முச்சி சீசன் 2” உடன் மீண்டும் வந்துள்ளது. இந்த காமெடி தொடரின் புதிய சீசன் ஒவ்வொன்றும் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய 8 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. கிராமப்புற பின்னணியில் அமைக்கப்பட்ட கதை மாந்தர்கள், குடும்பங்கள், உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான மோதல்கள் ஆகிய கதைகருக்களின் வழியாக இந்தக்கதை பயணிக்கிறது.

பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம்

கண்டிப்பான கிராமப்புற தந்தை, ஆடம்பரமான கிராமப்புற வில்லன், படிப்பின் மீதான உண்மையான ஆர்வம் கொண்ட கிராமப்புற பெண், தன்னைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றுவதற்காக போராடும் ஒரு நாயகன் என “அம்முச்சி சீசன் 2” முக்கிய காதாப்பாத்திரங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரைக்கதை கிராமப்புற வாழ்க்கை முறை மற்றும் கிராமத்து உணர்ச்சிக் கலவையை யதார்த்தமாக அணுகுவதோடு, ஒவ்வொரு எபிசோடிலும் எதிர்பாராத திருப்பங்களையும் கொண்டிருக்கும். அம்முச்சியைப் பார்ப்பது, கிராமங்களில் கோயில் திருவிழாவிற்குச் செல்வது போன்றவையும், திருவிழா மைதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள அவர்களின் பாரம்பரிய பழக்கவழக்கங்கள், சிறிய கடைகள் மற்றும் அந்தக் கடை விற்பனையாளர்களைச் சுற்றியுள்ள குழந்தைகள் என கிராமப்புற வாழ்வையும் நம் கண்முன் காட்டும். டிரம் அடிக்கும் போட்டி, கிளாசிக் ரேக்ளா ரேஸ், சிலம்பம் போட்டி, பாரம்பரிய மல்யுத்தப் போட்டி மற்றும் கலாச்சாரத்தை உள்ளடக்கிய கூடுதல் சிறப்புக்கள் இந்தத் தொடரில் உள்ளது. ஒரு கிராமத்தின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தின் அழகான மற்றும் யதார்த்தமான வாழ்வியலை “அம்முச்சி 2” வழங்கும். குறிப்பாக, கிராமங்களை விட்டு வெளியேறி வெளிநாடுகளில் குடியேறிய தமிழர்களை, தங்கள் சொந்த அனுபவத்தை உணர வைக்கும் நிகழ்ச்சியாக இது இருக்கும்.

நடிகர்கள் பட்டாளம்

ராஜேஷ் காளிசாமி இயக்கியுள்ள “அம்முச்சி சீசன் 2” தொடருக்கு, பிரசன்னா பாலச்சந்திரன் திரைக்கதை – வசனம் எழுதியுள்ளார். அருண், சசி, மித்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் சந்திரகுமார், ராஜேஷ் பாலச்சந்திரன், ஸ்ரீஜா, தனம், சாவித்திரி, முத்தமிழ், மனோஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். விவேக் சரோ இசையமைத்துள்ள இந்தத் தொடருக்கு சந்தோஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here