மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய கனமழை

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, கோவை, திருச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், இதர தென் மாவட்டங்களில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள்மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது. நாளை (அக்;27-ந் தேதி) நீலகிரி, திருச்சி, தென்காசி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பரவலாக மழை

சென்னையை பொறுத்தவரை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சிவகங்கை மாவட்டம் ஸ்ரீவைகுண்டம், சத்தியமங்கலம் தலா 11 செ.மீ, நீலகிரி மாவட்டம் ஹாரிசன் எஸ்டேட், அவினாசி தலா 8 செ.மீ, புதுக்கோட்டை குடுமியான்மலை, வீரபாண்டி, பவானிசாகர் தலா 7 செ.மீ, பந்தநல்லுார், சாத்தான்குளம் தலா 6 செ.மீ, திருமயம், திருச்சி டவுன் தலா 5 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தெற்கு வங்கக்கடலின் மத்தியப் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக உள்ளதன் காரணமாக, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here