கதாநாயகனாக நடிக்க வந்த பல வாய்ப்புகளை தவிர்த்து வந்தேன் என பிரபல காமெடி நடிகர் சூரி தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்

தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் சூரியும் ஒருவர். இவரது காமெடி காட்சிகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும். சூரிக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உண்டு. ஏராளமான படங்களில் நடித்து சூரி, அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விடுதலை’ படத்தில் நடித்து வருகிறார். தொடர்ந்து குணச்சித்திர வேடங்களிலும் கலக்கி வருகிறார். அவரது சினிமா வாழ்க்கையே எந்த பின்புலமும் இல்லாமல் தன்னம்பிக்கை, விடாமுயற்சியால் அடைந்த முன்னேற்றத்துக்கு எடுத்துக்காட்டானதாக அமைந்துவிட்டது.

கதாநாயகன்

இதுகுறித்து சூரி கூறியதாவது; இறைவன் அருளாலும், தமிழ் சினிமா இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் ஆதரவாலும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறேன். சினிமாவில் ஒரே ஒரு காட்சியில் ஓரமாக வந்துவிட மாட்டோமா என்று ஏங்கி இருக்கிறேன். சின்ன வேடங்களில் நடிக்கும்போது நமக்கும் கைதட்டல் கிடைத்துவிடாதா என்று ஆசைப்பட்டிருக்கிறேன். காமெடியனாக பேர் வாங்க விரும்பினேன். இவை அனைத்துமே நடந்தது. கதையின் நாயகனாக நடிக்க நிறைய வாய்ப்புகள் பல ஆண்டுகளாக வந்துகொண்டுதான் இருந்தன. காமெடியனாக கிடைத்த மக்கள் ஆதரவை தவறாக பயன்படுத்தி விடக்கூடாதே என்று தவிர்த்து வந்தேன். காமெடியன் நாயகனாகும்போது காமெடி கதையில் தான் நடிக்க வேண்டும் என்பது கட்டாயமா? அதைத்தான் பிற நடிகர்களுடன் நடிக்கும்போதே பண்ணுகிறோமே என்று நினைத்திருக்கிறேன். எனவே அப்படி களம் இறங்கும்போது அது கவனிக்க வைக்கும் நம் நடிப்பை வெளிக்கொண்டுவரும் கதையாக இருக்கவேண்டும் என ஆசைப்பட்டேன்.

கனவு போல இருந்தது

என் இன்னொரு பக்கத்தை காட்டும் கதைக்காக காத்திருந்தேன். ஆனால் அது வெற்றி அண்ணனின் படமாக அமையும் என்று எதிர்பார்க்கவில்லை. அழைப்பு வந்ததே கனவு போல இருந்தது. அசுரன் படத்துக்கு முன்பு பேசியது. அசுரன் படம் பெற்ற மாபெரும் வெற்றிக்கு பிறகு முன்னணி நடிகர்கள் படங்கள் வரிசைகட்ட நம் படம் தாமதம் ஆகலாம் என நினைத்தேன். ஆனால் வெற்றி அண்ணன் இந்த படத்தை தொடங்கியது அவரது பெரிய மனதை காட்டியது. அடுத்து பல வெற்றி படங்களை தயாரித்த எல்ரெட் குமார் தயாரிப்பு என்றதும் மகிழ்ச்சி ஆனேன். முதலில் சிவகார்த்திகேயனிடம் தான் பகிர்ந்தேன். இதற்கு முன்னர் எவ்வளவு சம்பளம் வாங்கி இருந்தாலும் இது பல கோடிக்கு சமம் அல்லவா? நேராக சாமி படத்தின் முன்பு வைத்துவிட்டு குடும்பத்திடம் சொன்னேன். மேனேஜருக்கே அதன் பின்னர் தான் சொன்னேன். விடுதலை தொடங்கியதை விட இப்போது இன்னும் பெரிய படமாகிவிட்டது. இந்த படத்தில் ஒரு நடிகனாக இருப்பதே பெரிய பாக்கியம் தான். வெற்றி அண்ணனுக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. அவரது அயராத உழைப்பால் மிக சிறந்த படமாக தயாராகி வருகிறது. படத்தின் விளம்பரம் பேப்பரில் வந்த அன்று முந்தைய இரவு தூக்கமே வரவில்லை. சிறுவயதில் தீபாவளிக்கு முதல் நாள் தூங்காமல் விழித்திருப்போமே அதுபோன்ற மனநிலையில் இருந்தேன். 45 ஆண்டுகளாக இசைக்கே ராஜாவாக விளங்குபவரின் இசையில் நடித்தது என் வாழ்நாள் பாக்கியம். அவரை சந்தித்தபோதும் மெய்மறந்தேன். அதேபோல் விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது நான் செய்த புண்ணியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here