உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

முதலமைச்சர் வருத்தம்

விழுப்புரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் பொன்முடியை வரவேற்று பேனர் கட்டிய 13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களைப் பலமுறை கண்டித்த பின்னும், இதுபோன்ற விரும்பத்தகாத கண்டிக்கத்தக்க செயல்கள் தொடர்வது என்னை வருத்தமடைய வைக்கிறது.

முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். என் வேண்டுகோளைக் கட்டளையாக ஏற்றுச் செயல்படுத்தக் கோருகிறேன். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் சோகமும் நடந்து விடுகிறது. விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நட முயன்றபோது மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. 13 வயதே ஆன தினேஷை இழந்து வாடும் அவரது பெற்றோருக்கு என்ன ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. அவரது குடும்பத்தாரின் துயரில் பங்கேற்று, துணை நிற்கிறேன். இனி இதுபோன்றவை நடக்காமல் தடுப்பதே உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here