வெங்கடேசப் பெருமாள் வேடத்தில் இருக்கும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

‘கைலாசா’

இந்தியாவில் பாலியல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் சர்ச்சை சாமியார் நித்தியானந்தாவின் நடவடிக்கைகள் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்தியாவில் இருந்து தப்பியுள்ள அவர், தனது ருத்ர கன்னிகளுடன் சேர்ந்து தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வேடார் நாட்டின் அருகே தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு ‘கைலாசா’ என பெயரிட்டு தனி நாடாக அறிவித்திருக்கிறார். அவ்வப்போது தான் சொற்பொழிவாற்றும் வீடியோக்களை நித்தியானந்தா வெளியிட்டு வந்தாலும், அவருக்கு நாங்கள் சளைத்தவர்கள் அல்ல என்பதை பறைசாற்றும் வகையில், கும்பலாக சேர்ந்து நடனமாடும் வீடியோக்களை அவரது ருத்ர கன்னிகளும் வெளியிட்டு வருகின்றனர். பெங்களூரு போலீசார் அவரை தேடி வரும் நிலையில், சத்தமில்லாமல் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் நித்தியானந்தா, தனது ‘கைலாசா’ நாட்டிற்கு அதிகாரப்பூர்வ மொழிகளாக ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழை அறிவித்துள்ளார். மேலும் கைலாசா நாட்டுக்கான கொடியும் அறிமுகப்படுத்தியுள்ளார்.

மீண்டும் சர்ச்சை

சர்ச்சைகளுக்கு புகழ்பெற்ற நித்தியானந்தா, வெங்கடேச பெருமாள் வேடத்தில் இருக்கும் புகைப்படங்களை முகநூல் பக்கத்தில் வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். பெருமாள் போன்று சங்கு, சக்கரம், நகை மற்றும் ஒளிரும் கிரீடத்துடன் புகைப்படம் வெளியிட்டிருக்கும் நித்தியானந்தா, ‘கைலாசா’ நாட்டுக்கு வருமாறு பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். பகவான் வெங்கடேஸ்வரரின் மங்களகரமான ஆசீர்வாதங்களையும், அருளையும் பெற்று உங்கள் நிதி நெருக்கடிகளிலிருந்து வெளிவாருங்கள், செல்வம் ஏராளமாக பெருகும் என்றும் நித்தி பதிவிட்டுள்ளார்.

எதிர்ப்பு

நித்தியானந்தாவின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், கடும் கண்டனங்களும், விமர்சனங்களும் எழுந்துள்ளன. நித்தியின் பெருமாள் வேட புகைப்படத்திற்கு பக்தர்கள் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here