வெப்பச்சலனம் காரணமாக சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு தெரிவித்துள்ளது.
கனமழைக்கு வாய்ப்பு
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு சேலம், நீலகிரி, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, புதுக்கோட்டை, விருதுநகர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, நாமக்கல், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்
சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், தருமபுரி, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி
அக்டோபர் 9 ஆம் தேதி அந்தமான் ஒட்டியுள்ள பகுதியில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் அதனைத் அடுத்த 24 மணி நேரத்தில் அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.