ஐந்து மாத காலத்திற்கு பிறகு தமிழகத்தில் மாவட்டங்களுக்கு இடையேயான போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது.

போக்குவரத்து சேவை

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மாா்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதையடுத்து பேருந்து சேவை நிறுத்தப்பட்டு, அத்தியாவசியப் பணிகளுக்காக மட்டும் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கிடையே, கடந்த ஜூன் மாதம் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதியளிக்கப்பட்ட போதிலும், சென்னை உள்பட 4 மாவட்டங்களில் பேருந்து சேவை இயக்கப்படவில்லை. இந்நிலையில், படிப்படியாக அளிக்கப்பட்ட தளா்வுகளையடுத்து, இன்று முதல் தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்துகள் இயக்க அனுமதியளிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் பேருந்து போக்குவரத்து சேவை இன்று காலை முதல் தொடங்கியது. சென்னை கோயம்பேட்டிலிருந்து இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து சேவை அதிகாலை தொடங்கியது. சுமார் 400 பேருந்துகள் வரை சென்னையிலிருந்து வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்பட உள்ளதாகவும், பயணிகளின் வருகைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கையை படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்திருப்பதாகவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுவதுடன், முகக்கவசம் அணிந்து வரும் பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மெட்ரோ ரயில்

மெட்ரோ ரயில் சேவை நாடு முழுவதும் இன்று முதல் மீண்டும் தொடங்கியது. சென்னையில் வண்ணாரப்பேட்டை முதல் விமான நிலையம் வரையிலான நீலநிற வழித்தடத்தில், சுமார் 5 மாதங்களுக்கு பிறகு இன்று காலை 7 மணிக்கு மெட்ரோ ரயில் சேவை தொடங்கியது. அரசு குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி இரவு 8 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. செப்டம்பர் 9ம் தேதி முதல் சென்ட்ரலில் இருந்து கோயம்பேடு வழியாக விமான நிலையம் வரையிலான பச்சை நிற வழித்தடத்தில் ரயில் இயக்கப்படுகிறது. பயண அட்டைகள் பெறுதல், ரீசார்ஜ் செய்வது மற்றும் செல்போன் உதவியுடன் மெட்ரோ ரயில் செயலியில் ‘கியூ.ஆர்.’ குறியீட்டு முறையில் டிக்கெட் எடுக்கும் முறை அதிகம் ஊக்குவிக்கப்படும். அதே சமயத்தில் கட்டணத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய காற்று செல்லும் பாதைகளில் புறஊதா கதிர்கள் மூலம் கிருமிகள் அழிக்கப்படுகின்றன. கூட்ட நெரிசலை தவிர்ப்பது, சமூக இடைவெளியை பின்பற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் 5 முதல் 10 பணியாளர்கள் வரை கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும் திறமையாகவும், பாதுகாப்பாகவும் பயணிகளை கையாளுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் எந்தவித அச்சமும் இன்றி பயணிக்கலாம் என்றும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில் சேவை

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்க்கப்பட்ட நிலையில் மீண்டும் தமிழகத்தில் ரயில் சேவை இன்று தொடங்கியது. 5 மாதங்களுக்கு பிறகு ரயில் சேவை தொடங்கியதால், சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஒரே ஒரு நுழைவு வாயில் வழியாக உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அனுமதிக்கப்படுகின்றனர். சென்டிரல் ரயில் நிலையத்தில் 6வது நுழைவு வாயில் வழியாகவும், எழும்பூர் ரயில் நிலையத்தின் மையப்பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாகவும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு உள்ளே நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். சென்டிரலில் 10 மற்றும் 11வது நடைமேடைகள் ரயில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. எழும்பூர் ரயில் நிலையத்தில் 4 மற்றும் 5வது நடைமேடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு பிறகே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.சி பெட்டிகளில் போர்வைகள் எதுவும் வழங்கப்படாது எனவும், பயணிகள் தவிர வேறு யாருக்கும் ரயில் நிலையத்துக்குள் அனுமதி இல்லை எனவும் தெற்கு ரயில்வே ஏற்கனவே தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here