கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியிருக்கும் “குட்லக் சகி” என்ற படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

வீராங்கனையாக கீர்த்தி

நடிகையர் திலகம் படத்தின் வெற்றிக்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் தெலுங்கு இயக்குநரான நாகேஷ் குன்னூருடன் கைக்கோர்த்தார். அவர் உருவாக்கிய “குட்லக் சகி” என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ், ஆதி, ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராசியில்லாத பெண் என்று எல்லோரும் கீர்த்தி சுரேஷை பார்க்கின்றனர். ஆனால் அவர் எப்படி தேசிய அளவில் துப்பாக்கி சுடுவதில் முன்னணி வகிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை. நடிப்பிலும், அழகிலும் எந்த படத்திலும் பஞ்சம் வைக்காத கீர்த்தி சுரேஷ், இப்படத்திலும் கச்சிதமாகவே நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு மலையாளம் என்று மூன்று மொழிகளில் இப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ் மொழி டீஸரை விஜய் சேதுபதியும், தெலுங்கு மொழி டீஸரை பிரபாஸும், மலையாள மொழி டீஸரை பிருத்விராஜும் வெளியிட்டுள்ளனர்.

ரசிகர்களிடம் வரவேற்பு

துப்பாக்கி சுடும் வீராங்கனையின் கதையாக “குட்லக் சகி” படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். சமீப காலமாகவே பெண்களை ஊக்குவிக்கும் மாதிரியான படங்கள் அதிகம் வெளிவந்து கொண்டிருக்கிறது. சகுந்தலா தேவி, குஞ்சன் சக்சேனா போன்ற படங்கள் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, இந்த படமும் நல்ல பெயரையே பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கீர்த்தி சுரேஷின் நடிப்பில் வெளிவந்த ‘பெண்குயின்’ திரைப்படம் இணையதளத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதனால் இப்படம் இவருக்கு ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது. “குட்லக் சகி” படத்தின் டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால், முழுப் படத்தையும் பார்க்க ரசிகர்கள் பெருமளவில் ஆவலாக இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here