இன்று 56வது பிறந்தநாள் கொண்டாடி வரும் ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஆக்சன் கிங்

மொழிப் பாகுபாடின்றி அனைத்து ரசிகர்களாலும் ரசிக்கப்படும் நடிகர்களில் அர்ஜுனும் ஒருவர். இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவரும். பல படங்களில் அர்ஜுன் நடித்து இருந்தாலும், ‘ஜெய்ஹிந்த்’, ‘ஜென்டில்மேன்’ போன்ற திரைப்படங்கள் இவரது அடையாளமாகும். ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைவரையும் தேசப்பற்றும், நாட்டு வளர்ச்சியிலும் ஈடுபடுத்த அர்ஜூன் அதிக முயற்சிகளை எடுத்து வருவார். நடனம், ரொமான்ஸ் மட்டுமல்லாமல் நல்ல கருத்துக்களை மக்கள் மனதிலும் விதைக்கும் கதைகளையே பெரும்பாலும் தேர்ந்தெடுத்து நடித்து வரும் அர்ஜூனுக்கு, ஆக்சன் கிங் என்ற பெயர் பொருத்தமாக அமைந்துள்ளது.

தனித்துவமான அர்ஜுன்

தமிழ் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிப் படங்களிலும் அர்ஜூன் நடித்துள்ளார். கிட்டதட்ட 150 படங்களுக்கு மேல் அவர் நடித்திருக்கிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் விளங்கும் அர்ஜூன், அவர் இயக்கி நடித்த ‘ஜெய்ஹிந்த்’ திரைப்படம் இன்றும் பேர் சொல்லும் அளவிற்கு அனைவராலும் புகழப்பட்டு வருகிறது. பெரும்பாலும் தேசப்பற்று நிறைந்த திரைப்படங்களையே தேர்ந்தெடுத்து நடிப்பது அவரது வழக்கம் ஆகும். அந்த வகையில், அவர் நடித்த ஜென்டில்மேன், குருதிப்புனல், முதல்வன், ஏழுமலை போன்ற திரைப்படங்கள் அனைத்தும் பெரிய அளவில் வசூல் சாதனையை படைத்துள்ளது.

பிரபலங்கள் வாழ்த்து

சுதந்திர தினமான இன்று நடிகர் அர்ஜூன் தனது 56வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். சுதந்திர தினத்தன்று பிறந்ததால் தான் இவருக்கு தேசப்பற்று அதிகமாக வந்ததோ, என்னவோ தெரியவில்லை, இன்றும் அவரது தேசப்பற்று மிகுந்த படங்களுக்கு நிகராக வேறு எந்த நடிகர்களாலும் ஈடுகொடுக்க முடியாது. அர்ஜூனின் பிறந்த நாளான இன்று சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை மட்டுமல்லாமல், சுதந்திர தின வாழ்த்துக்களையும் சேர்த்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here