கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிகழ்ந்த விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20ஆக அதிகரித்துள்ளது.

விமானம் விழுந்து விபத்து

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் துபாயில் சிக்கித் தவித்த இந்தியர்களை அழைத்துக் கொண்டு, கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.1344 விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் 184 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 190 பேர் பயணம் செய்தனர். கோழிக்கோடு விமான நிலையத்தை விமானம் வந்தடைந்த போது, பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. விமானி மிகவும் சிரமப்பட்டு விமானத்தை தரையிறக்கினார். ஓடுபாதையில்  விமானம் நிற்க வேண்டிய நிலையில், திடீரென்று விமானியின் கட்டுப்பாட்டை இழந்து முன்னோக்கி சென்று சுற்றுச்சுவரை இடித்து தள்ளியது. பின்னர், 35 அடி ஆழ பள்ளத்தில் பயங்கர சத்தத்துடன் விழுந்து, விமானத்தின் முன்பக்க வாசல் வரையிலான பகுதிவரை இரண்டாக பிளந்தது. அதிர்ஷ்டவசமாக விமானம் தீ பிடிக்காததால், மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.

 

பலி எண்ணிக்கை உயர்வு

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப் படையினர், துரிதமாக செயல்பட்டு விமான இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். விமானத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட மீட்புப் படையினர், அவர்களை அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களை ஆய்வு செய்த மருத்துவர்கள் 15 பேர் உயிரிழந்துவிட்டதாக முதல்கட்டமாக அறிவித்தனர். இந்நிலையில், விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. விமானி உட்பட 20 பயணிகள் இறந்துள்ளனர். விமான விபத்தில் விமானத்தில் உயிரிழந்தவர்கள் தவிர எஞ்சியவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மருத்துவமனைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலையம் மூடல்

விமான விபத்து குறித்து விசாரணை நடத்த வெளிவிவகாரத்துறை அமைச்சர் முரளிதரனுடன், டிஜிசிஏ குழு ஒன்று கோழிக்கோடு விமான நிலையம் வந்துள்ளது. இதனையடுத்து விமான நிலையத்தின் அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு வரும் அனைத்து விமானங்களும் கண்ணூர் மற்றும் கொச்சி விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன.

தீப்பிடித்து இருந்தால் சிக்கல்

விமான விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, இரு விமானிகள் உள்பட பலர் உயிரிழந்திருப்பது துரதிர்ஷ்டவசமானது என்றார். இந்தியாவுக்கு 190 பயணிகளுடன் வந்த இந்த விமானத்தின் விமானி, ஓடுதள பாதையின் முடிவு பகுதி வரை ஓட்டி செல்ல முயற்சித்து இருக்க வேண்டும் என்றும் பருவமழை பொழிவால் ஏற்பட்ட சறுக்கலான நிலையால், விமானம் ஓடுதள பாதையில் இருந்து விலகி சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். விமானம் தீப்பிடித்து இருந்தால் தங்களுடைய பணி அதிக சிக்கலாகி இருக்கும் எனவும் அவர் கூறினார். 

குடியரசுத் தலைவர் இரங்கல்

கோழிக்கோடு விமான விபத்து குறித்து குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்; கேரளாவின் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது குறித்து கேள்விப்பட்டதில் மிகுந்த மனவேதனையடைகிறேன். இதுதொடர்பாக, கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானிடம் பேசினேன். நிலைமை குறித்து விசாரித்தேன். பாதிக்கப்பட்ட பயணிகள், விமான ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்துகொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் இரங்கல்

விபத்து மற்றும் மீட்பு பணிகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேரளா முதலமைச்சர் பினராயி விஜயனிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள பிரதமர், இச்சம்பவம் மிகவும் மனவேதனையளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இதேபோல், அமெரிக்கா சார்பில், வெளியுறவு கொள்கை மற்றும் சர்வதேச உறவுகளுக்கான மாநில துறை சார்பிலும், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் கென் ஜஸ்டரும் கேரள விமான வித்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here