மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ள செய்தியை கேட்ட அவரது குடும்பத்தினர் மீண்டும் அவரே பிறந்ததாக உருக்கத்துடன் தெரிவித்துள்ளனர்.

திடீர் மரணம்

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சேதுராமன். ‘வாலிப ராஜா’, ‘சக்க போடு போடு ராஜா’, ’50 50′ ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் சந்தானத்தின் நெருங்கிய நண்பரான இவர், தோல் சிகிச்சை நிபுணர் ஆவார். சென்னை அண்ணா நகரில் தோல் சிறப்பு மருத்துவமனையையும் இவர் நடத்தி வந்தார். சிறந்த மருத்துவராக மட்டுமல்லாமல், சிறந்த நடிகராகவும் பெயர் பெற்றார். சேதுராமன் கடந்த 2016ஆம் ஆண்டு உமையாள் என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒன்றரை வயதில் சஹானா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆன நிலையில், கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி மாரடைப்பால் சேதுராமன் உயிரிழந்தார். அவரது மரணம் திரைத்துறையினர் மட்டுமல்லாமல், மருத்துவத் துறையினரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. கொரோனா ஊரடங்கு காரணமாக சேதுவின் இறுதி சடங்கில் நண்பர்கள் பங்கேற்க முடியாமல் போனாலும், நடிகர் சந்தனாம் கலந்துகொண்டு அவரது உடலை சுமந்து சென்றார். சேதுராமன் மறையும் போது அவரது மனைவி கர்ப்பமாக இருந்தார். தற்போது அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.

ஆண் குழந்தை

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். அதுவும் மறைந்த நடிகர் சேதுராமன் மீண்டும் தங்களுக்கு கிடைத்துள்ளதாக அவர்கள் உருக்கமாக கூறியுள்ளனர். உமையாளுக்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஜாங்கிட் சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் மீண்டும் வந்து விட்டார். உங்கள் வயதை தான் நீங்கள் மாற்றி உள்ளீர்கள். அனைவரும் உங்களை குட்டி சேது என்று அழைப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார். சேதுவின் மனைவி உமையாளுக்கு அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here