ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்ற சித்தி சீரியல் இரண்டாம் பாகத்தின் புதிய புரொமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

படப்பிடிப்புகள் ரத்து

கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைத்து ஷூட்டிங்களும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் சினிமாத்துறையை சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வருவாயின்றி தவித்தனர். மேலும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாததால், புதிய எபிசோடுகளை ஒளிபரப்ப முடியாமல் தவித்த டிவி சேனல்கள், பழைய சீரியல்களையே மறுஒளிபரப்பு செய்தது. இதனால் இல்லத்தரசிகள் பெரும் கவலையில் இருந்தனர். இதனிடையே, ஒருசில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை மட்டும் நடத்திக்கொள்ள தமிழக அரசு அனுமதி வழங்கியதையடுத்து சின்னத்திரை படப்பிடிப்புகள் மட்டும் துவங்கப்பட்டு, பல்வேறு மாற்றங்களுடன் சீரியல்களின் புதிய எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

சின்னத்திரையில் சாதனை

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் கொடிகட்டிப் பறப்பவர் ராதிகா சரத்குமார். தனது வெள்ளித்திரை வாழ்க்கையை கிழக்கே போகும் ரயில் மூலம் தொடங்கிய அவர், 28 ஆண்டுகளுக்குப் பிறகு சின்னத்திரையில் அறிமுகமானார். பெண் மற்றும் சிறகுகள் தொடர்களில் நடித்தார் ராதிகா. இது இரண்டும் பெயர் சொல்லும் அளவிற்கு மக்களிடம் சென்றடயவில்லை. இதனையடுத்து சித்தி என்ற சீரியலில் நடித்தார். மூன்று வருடங்கள் ஒளிபரப்பான இத்தொடர் மூலம் ராதிகா சரத்குமார் சின்னத்திரையில் உச்சம் தொட்டர். இதன்பின் செல்வி, அரசி, செல்லமே, வானி ராணி, சந்திரகுமாரி போன்ற சீரியல்களில் நடித்து சின்னத்திரையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். தற்போது 21 ஆண்டுகள் கழித்து சித்தி பாகம் 2வை ராதிகா தயாரித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்ட இதன் படப்படிப்பு தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாக உள்ளது.

கதாபாத்திரங்கள் மாற்றம்

ராதிகாவின் சித்தி 2 சீரியலிலும் மிகப்பெரிய மாற்றங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. முன்பு சித்தி 2 சீரியலில் ராதிகாவுக்கு கணவராக பொன்வண்ணன் நடித்து வந்தார். இனி அவருக்கு பதிலாக நடிகர் நிழல்கள் ரவி அந்தக் கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். மேலும் ராதிகாவின் இரண்டாவது மருமகளாக வந்த நிதிலா சுமனுக்கு பதிலாக வேறொருவரும், பொன்வண்ணன் தங்கை கதாபாத்திரத்தில் நடித்த சில்பாவிற்கு பதிலாக ஜெயலட்சுமியும் மாற்றம் செய்யப்பட்டு சித்தி 2 சீரியல் படப்பிடிப்பு தொடங்கி இருக்கிறது. வில்லியாக நடித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த நடிகை ஸ்ரீஷா, கொரோனா அச்சுறுத்தலால் அங்கிருந்து வர இயலாத காரணத்தால், அவருக்குப் பதிலாக மீரா கிருஷ்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வருகிறார். கொரோனா பிரச்சனையால் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. 

இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

இந்த நிலையில், சித்தி சீரியலில் இரண்டாம் பாகத்திற்கான புதிய புரொமோ வீடியோ வெளியாகி அனைவராலும் வெகுவாக கவர்ந்துள்ளது. அந்த வீடியோவில், முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அனைவரும் ராதிகா சரத்குமாரின் பின்னால் நின்று கொண்டு பேசிக் கொண்டிருக்கின்றனர். அழகான பந்தல்களில், பூ அலங்காரத்துடன் அனைவரும் பளிச்சென்று நிற்கின்றனர். சுவாரஸ்யமான எபிசோடுகளுடன் புது கதை களத்துடன் உங்களை மீண்டும் சந்திக்க வருகிறோம் என்று அனைவரும் கூறும் விதமாக இந்த வீடியோ அமைந்துள்ளது. சித்தி 2வின் புரொமோ வீடியோவைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்த இல்லத்தரசிகள், புதிய எபிசோடுகளின் ஒளிபரப்பிற்காக காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here