ஊரடங்கு காலத்தில் பெட்ரோல், டீசல் விற்பனை சரிந்துள்ள நிலையில் சமையல் எரிவாயுவின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது.

பெட்ரோல், டீசல் பயன்பாடு குறைவு

ஊரடங்கு தொடங்கியதில் இருந்தே பெட்ரோல், டீசல் பயன்பாடு வெகுவாக குறைந்துவிட்டது. இந்திய எண்ணெய் நிறுவனங்களின் ஒட்டுமொத்த எரிபொருள் விற்பனையில் டீசல் விற்பனை ஐந்தில் இரண்டு பகுதியாக உள்ளது. இதன் விற்பனை கடந்த ஜூலை மாதம், அதற்கு முந்தைய மாதத்தை விட 13 சதவீதம் சரிந்து 4.85 மில்லியன் டன்களாக மட்டுமே உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில் 21 சதவீதம் சரிந்துள்ளது என்று எண்ணெய் நிறுவன புள்ளி விவரத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதுபோல், பெட்ரோல் விற்பனையும் ஜூன் மாதத்தை விட ஒரு சதவீதம் சரிந்து 2.03 மில்லியன் டன்களாக உள்ளது. முந்தைய ஆண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 11.5 சதவீதம் சரிவடைந்துள்ளது.

விற்பனை அதிகரிப்பு

கொரோனா ஊரடங்கு மட்டுமின்றி, வடமாநிலங்கள் சிலவற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் பெட்ரோலிய பொருட்கள் விற்பனையை பாதித்துள்ளதாக எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரத்தில், சமையல் எரிவாயு விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் சமையல் எரிவாயுவின் விற்பனை 10 சதவீதம் அதிகரித்து, 2.275 மில்லியன் டன்களாக உள்ளது. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் விற்பனை 3.5 சதவீதம் உயர்ந்துள்ளது. விமான பெட்ரோல் விற்பனை 4 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் 65 சதவீதம் சரிந்துள்ளது.

எரிவாயு சிலிண்டர் விலை

சென்னையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.610.50 ஆக உள்ளது. கொல்கத்தாவில் ரூ.620.50 ஆகவும், மும்பையில் ரூ.594 ஆகவும் இருக்கிறது. 19 கிலோ எடை கொண்ட வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1,255 ஆகவும், டெல்லியில் ரூ.1,135.50 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1,197.50 ஆகவும், மும்பையில் ரூ.1,090.50 ஆகவும் உள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here