சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் “நீதி கிடைத்திட தலையிட வேண்டும்” என்று அவரது சகோதரி பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

சோகத்தில் ஆழ்த்திய மரணம்

பாலிவுட் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் 14ஆம் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சுஷாந்தின் மரணம் திரையுலகம் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த இந்தியாவையும் சோகத்தில் ஆழ்த்தியது. சின்னத்திரை மூலம் பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருந்த சுஷாந்த் சிங் ராஜ்புத், திடீரென்று தற்கொலை செய்துகொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவரது மரணத்திற்கான காரணத்தைக் கேட்டு ரசிகர்கள் மட்டுமல்லாமல், பல முன்னணி பிரபலங்களும் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். சுஷாந்த் தற்கொலை தொடர்பாக மும்பை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சினிமாத்துறையில் அரசியல்

சினிமா பின்புலம் உள்ள நடிகர், நடிகைகள் செய்யும் அரசியல் காரணமாக பலர் சினிமா வாய்ப்புகளை இழந்து வருவதாகவும், அதுபோலவே சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த 6 மாதங்களில் 7 பட வாய்ப்புகளை இழந்ததாகவும் கூறப்படுகிறது. அதனால் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளான அவர், அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாகவும், இந்தப் பிரச்சனை நீடித்துக் கொண்டே இருந்ததால் சுஷாந்த் தற்கொலை செய்து கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரசிகர்கள் முதல் முன்னணி சினிமா நட்சத்திரங்கள் வரை சுஷாந்தின் தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிக்க சிபிஐக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இவர் கடைசியாக நடித்த ‘தில் பெச்சாரா’ திரைப்படம் கடந்த வாரம் ஆன்லைனில் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. இந்தியாவில் அதிக ரேட்டிங் கிடைத்த படமாக ‘தில் பெச்சாரா’ திகழ்கிறது.

லிவ்விங் டூ கெதர்

இந்நிலையில், சுஷாந்த் மரணம் தொடர்பாக அவரது தந்தை கே.கே. சிங் சில தினங்களுக்கு முன் சுஷாந்த் காதலி ரியா சக்ரபோர்த்தி மீது பாட்னா போலீசில் புகார் அளித்திருந்தார். ரியா மற்றும் அவரது குடும்பத்தினர் சுஷாந்தை ஏமாற்றியதாகவும், மன ரீதியாக துன்புறுத்தி தற்கொலைக்கு தூண்டியதாகவும் அந்தப் புகாரில் கூறப்பட்டிருந்தது. இதனடிப்படையில் ரியா சக்கரபோர்த்தி மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உட்பட பல பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இது பாலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனிடையே தன் மீதான புகாரை பாட்னாவிலிருந்து மும்பைக்கு மாற்றக்கோரி நடிகை ரியா உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், சுஷாந்த்துடன் கடந்த ஓராண்டு காலம் லிவ்விங்-டூ-கெதரில் வாழ்ந்ததாகவும், அதன்பின் அவரது வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்திருகிறார். சுஷாந்த் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகவும் ரியா அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னைத் துன்புறுத்தவே சுஷாந்த்தின் தந்தை, இப்படி ஒரு புகாரை கொடுத்துள்ளதாகவும் நடிகை ரியா சக்ரபோர்த்தி குற்றம்சாட்டியுள்ளார்.

பிரதமருக்கு வேண்டுகோள்

புகார், வழக்கு என சுஷாந்த் மரண வழக்கு விசாரணை சூடுபிடித்துள்ள நிலையில், சுஷாந்த் சகோதரி ‘‘நீதி கிடைத்திட தலையிட வேண்டும்’’ என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு டுவிட்டர் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து சுஷாந்த் சகோதரரி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது; ‘‘நான் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் சகோதரி. இந்த வழக்கை உடனடியாக முழுவதுமாக ஆராய வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன். இந்தியாவின் நீதித்துறை மீது நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். நீதியை எதிர்பார்க்கிறோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here