ஜோசியரின் அறிவுரைப்படி திருநாகேஸ்வரம் கோவிலுக்கு சென்று வந்த பிறகு தான் நடிகை நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

லேடி சூப்பர் ஸ்டார்

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாரா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து வருகிறார். முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் இவர், கடந்த 2003 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான “மனசினகாரே” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகில் முதன்முதலாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் சரத்குமார் நடிப்பில் வெளிவந்த ஐயா திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர் ரஜினிகாந்த், அஜித், விஜய், சூர்யா, விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தற்போது ‘அறம்’, ‘மூக்குத்தி அம்மன்’ போன்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் ‘அண்ணாத்த’ படத்திலும் நயன்தாரா நடிக்கிறார்.

காதலில் விழுந்த நயன்

நயன்தாரா சிம்புவுடன் இணைந்து “வல்லவன்” படத்தில் நடித்தார். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. மேலும் அவர்கள் நெருக்கமாக இருக்கும் புகைபடங்களும் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. சில மாதங்களில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்ததாக செய்திகள் வெளியாகின. அதன்பிறகு பிரபுதேவா மீது காதல் கொண்ட நயன்தாரா, விரைவில் அவரை திருமணம் செய்யப் போவதாக பேச்சுகள் அடிப்பட்டது. இதற்காக கிறிஸ்துவ மதத்திலிருந்து இந்து மதத்திற்கும் மாறினார் நயன்தாரா. சில பல காரணங்களால் இருவரும் பிரிந்தனர். பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்வதற்காக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த நயன்தாரா, மீண்டும் கம்பேக் கொடுத்தார். விக்னேஷ் சிவன் இயக்கிய “நானும் ரெளடி தான்” திரைப்படத்தில் நடித்தபோது, விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் ஏற்பட்டது. தற்போது காதலித்து வரும் இருவரும், ஒன்றாக வசித்து வருவதாக கூறப்படுகிறது.

விரைவில் திருமணம்?

நயன்தாரா கடந்த சில மாதங்களுக்கு முன்பு ‘மூக்குத்தி அம்மன்’ படத்தில் நடித்து வந்த சமயத்தில், விக்னேஷ் சிவனுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள பல கோவில்களுக்கு சென்றார். அதுதொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது. இதனிடையே பிரபல ஜோதிடரின் ஆலோசனைப்படி ராகுவுக்கு உகந்த ஸ்தலமான திருநாகேஸ்வரம் கோயிலுக்கு சென்று வந்த பிறகு, இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலம் முடிந்தவுடன் இருவரும் திருநாகேஸ்வரம் கோயிலுக்கு செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here