இன்று பிறந்தநாளை கொண்டாடும் பிரபல பின்னணி பாடகி சித்ராவுக்கு ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இனிமையான இசை ராகம்

ஒரு திரைப்படம் உருவாகி திரையரங்குகளில் வெளியாவதற்குள், அதில் பல வேலைகள் அடங்கியுள்ளன. ஒரு படத்திற்கு மிகவும் முக்கியமானது இசையும், பாடல்களும். இசையும் பாடல்களும் சேர்ந்து நம்மை ரசிக்க வைக்கின்றன. பாடல்கள் தான் என்றென்றும் ரசிகர்கள் மனதை கட்டிப் போட்டுள்ளன. அப்படிப்பட்ட பாடல்களை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்து, அதனை டிரெண்ட் ஆக்கி, கொண்டாடி வருகின்றனர். திரைப்படங்களின் இசையில் பாடல்கள் மிகவும் முக்கியமானவை. நாம் மகிழ்ச்சியில் இருக்கும் போதும், துன்பத்தில் இருந்தாலும் நம்முள் வாழக்கூடியது பாடல்கள். அந்தப் பாடல்களை பாடும் பிரபல பின்னணி பாடகி சித்ராவிற்கு இன்று பிறந்தநாள்.

சின்னக்குயில் சித்ரா

கே.எஸ்.சித்ரா என்று இவருக்கு பெயர் உண்டு. ஆனால் ரசிகர்கள் இவரை சின்னக்குயில் சித்ரா என்றே அழைக்கின்றனர். அவரது குரல் குயில் போல் இனிமையாக இருக்கும் என்பதால், அவரை இதுபோன்று ரசிகர்கள் அழைப்பார்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, பெங்காலி, பஞ்சாபி எனப் பல்வேறு மொழிகளில் சுமார் 25 ஆயிரத்திற்கும் அதிகமாக பாடல்களை பாடியுள்ளார் சித்ரா. தனது தாய் மொழியான மலையாளத்தில் முதல் முறையாக பாடல்களை பாட ஆரம்பித்த அவர், அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் படங்களில் அதிக பாடல்களைப்பாடி முன்னணிப் பாடகியாக உருவெடுத்தார். தமிழில் சித்ரா முதன்முதலாக “பூஜைக்கு ஏத்த பூ இது” என்ற பாடலை பாடினார். இளையராஜா இசையில் சித்ரா பாடிய பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. நதியா நடித்த பூவே பூச்சுடவா படத்தில் ‘சின்னகுயில் பாடும் பாடல் கேட்குதா’ என்ற பாடலை பாடிய பின்னர் அவருக்கு ‘சின்னகுயில்’ என்று பட்டம் கொடுக்கப்பட்டது. இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரஹ்மான், தேவா, வித்யசாகர், யுவன் ஷங்கர் ராஜா என அனைத்து இசையமைப்பாளர்களுடன் இணைந்து பாடல்களைப் பாடியுள்ளார் சித்ரா. கீதாஞ்சலி படத்தில் இளையராஜாவுடன் ‘ஒரு ஜீவன் அழைத்தது’ பாடலை சித்ராவும் பாடினார். இப்பாடல் சித்ராவின் குரலை பட்டித்தொட்டி எங்கும் பரவச் செய்தது. புன்னகை மன்னன் படத்தில் நான்கு பாடல்களை பாடினார் சித்ரா. அந்த நான்கு பாடல்களையும் சித்ரா தான் பாடினார் என்றால் யாரும் நம்பாத அளவிற்கு வெவ்வேறு குரலாக வித்தியாசமாக இருக்கும்.

சித்ராவிற்கு கிடைத்த அங்கீகாரம்

பாடகி சித்ரா சிறந்த பாடகிக்கான தேசிய விருதை ஆறு முறை வென்றுள்ளார். இளையராஜா இசையில் சிந்து பைரவி படத்தில் இவர் பாடிய ‘பாடரியே படிப்பரியே’ பாடலுக்காக சிறந்த பாடகிக்கான தேசிய விருதை முதல் முறையாக வென்றார். தமிழில் மொத்தமாக மூன்று தேசிய விருதை வென்றுள்ளார் சித்ரா, .ஏ.ஆர். ரஹ்மான் இசையில் மின்சார கனவு திரைப்படத்தில் அவர் பாடிய “மானா மதுரை மாமரத்து ” பாடல் மற்றும் ஆட்டோகிராப் படத்தில் பாடிய “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே” ஆகிய பாடல்களுக்கு விருதை பெற்றுள்ளார். இளையராஜா இசையில் பலரது ஃபேவரேட்டான ‘நின்னுகோரி வரனம்’, ‘தென்பாண்டி தமிழே என் சீங்கார குயிலே’, ‘ஒ பிரியா பிரியா’, ‘மீனம்மா மீனம்மா’, ‘நிக்கட்டும்மா போகட்டும்மா’ போன்ற பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளது.

திரையுலகினர் வாழ்த்து

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் அதிக பாடல்களை பாடியுள்ளார் சித்ரா. ரஹ்மானின் 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 100க்கும் மேற்பட்ட பாடல்களை பாடினார் சித்ரா. டூயட் படத்தில் ‘அஞ்சலி அஞ்சலி’ மற்றும் ‘என் காதலே’, கருத்தம்மாவில் ‘தென்மேற்கு பருவகாற்று’, பாம்பாய் படத்தில் ‘கண்ணாலனே’, ‘கண்ணாமூச்சி ஏன் அட’ பாடல், ‘இஞ்சிரங்கோ’ ஆகிய பாடல்கள் ரசிகர்களின் ஃபேவரேட். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான சித்ராவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இசை இருக்கும் வரை சித்ராவின் குரல் அனைவரின் காதுகளில் ஒலித்துத் கொண்டே இருக்கும் என்பதில் எள்ளவும் சந்தேகமில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here