விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

வசூலை குவித்த படம்

இசையமைப்பாளராக இருந்து நடிகராக அறிமுகம் ஆன விஜய் ஆண்டனி, ‘நான்’ படத்தின் மூலமாக 2012ல் ஹீரோவாக அறிமுகம் ஆனார். அந்தப் படம் பெரிய அளவில் ரசிகர்களை ஈர்த்ததையடுத்து, சலீம், இந்தியா பாகிஸ்தான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். 2016ம் ஆண்டு வெளியான ‘பிச்சைக்காரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மார்க்கெட்டிலும் இந்தப் படம் அதிக வசூலை ஈட்டியது. இப்படம் விஜய் ஆண்டனியின் திரை வாழ்கையில் பெரிய மைல்கல்லாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. ‘பிச்சைக்காரன்’ படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி வருவதாக விஜய் ஆண்டனி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் விஜய் ஆண்டனியின் பிறந்தநாள் சிறப்பாக ‘பிச்சைக்காரன் 2’ படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தமிழ் மற்றும் தெலுங்கில் அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

‘பிச்சைக்காரன்’ படத்தின் முதல் பாகத்தை இயக்கிய சசி, தற்போது வேறு படங்களில் பிசியாக இருப்பதால், ‘பாரம்’ படத்தின் மூலம் தேசிய விருது வென்ற இயக்குநர் பிரியா கிருஷ்ணசுவாமி இதனை இயக்கவுள்ளார். இரண்டாம் பாகத்தை இன்னும் அதிக தரத்தில் உருவாக்க திட்டமிட்டு இருக்கிறார் விஜய் ஆண்டனி. இது, படத்தின் டெக்னிக்கல் குழுவைச் சேர்ந்த பலருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் எனவும் அதனால் பல சர்ப்ரைஸ் அறிவிப்புகள் விரைவில் வரலாம் எனவும் கூறப்படுகிறது. ‘பிச்சைக்காரன் 2’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள், அதனை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here