திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் பராமரிப்பில் உள்ள திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் மீது அந்த குடும்பத்திற்கு உரிமையுள்ளது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பத்மநாப சுவாமி கோயில் வழக்கு

கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ரகசிய அறைகளில் தங்கம், வைரம், வெள்ளி பொருட்கள் அடங்கிய பொக்கிஷங்கள் இருந்தது வெளி உலகுக்கு தெரியவந்தது. திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர் நிர்வகித்து வரும் இக்கோயிலில் உள்ள சொத்துக்கள் மற்றும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், சொத்துக்களை அரசு நிர்வகிக்க வேண்டும் எனவும் கோவிலின் ரகசிய அறைகளைத் திறந்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம், கோவிலை அரசு நிர்வகிக்க வேண்டும் என கடந்த 2011ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்றம் தீர்ப்பு

இந்த தீர்ப்பால் அதிர்ச்சி அடைந்த திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தினர், அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேரள உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்ததுடன், கோவிலில் உள்ள ரகசிய அறைகளைத் திறக்கவும் உத்தரவிட்டது. இந்த வழக்கு கடந்தாண்டு ஏப்ரலில் மீண்டும் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பத்மநாபசுவாமி கோவிலின் மீது மன்னர் குடும்பத்திற்கு உரிமை உள்ளது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளித்துள்ளது. கோவில் நிர்வாகத்தை மேற்பார்வையிட, மாவட்ட நீதிபதியின் கீழ் இடைக்கால குழு அமைக்கலாம் எனவும் குழுவில் இடம்பெறுபவர்கள் அனைவரும் ஹிந்துக்களாக இருக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியுள்ளது. கருவூலத்தை திறப்பது தொடர்பாக குழுவே முடிவு செய்யும் எனவும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here