ஊரடங்குடன் ஒப்பிடும்போது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் இப்போது தான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி உரை

கடந்த 2014ம் ஆண்டு முதன்முறையாக பிரதமராக பதவியேற்ற பின்னர், பொதுமக்களுடன் உரையாற்றும் வகையில்  ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கினார். இந்தியாவின் பெரும்பான்மையான மக்களிடம் இந்த நிகழ்ச்சியை கொண்டு செல்லும் வகையில், வானொலி வாயிலாக மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை ‘மன் கி பாத்  நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, இன்று மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் பிரதமர் நரேந்திர மோடி மன் கி பாத்’ நிகழ்ச்சியில் நாட்டு மக்களுடன் உரையாற்றினார். கொரோனா பரவலை தடுக்க ஊடரங்கு உத்தரவு அமலில் இருக்கும் நிலையில் 4-வது முறையாக ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு விளக்கங்கள் அளித்தார். 

சவால்களை சந்தித்துள்ளோம்

நிகழ்ச்சியில் பிரதமர் பேசுகையில்; ஊரடங்கு காலத்துடன் ஒப்பிடும் போது தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் நாம் இப்போதுதான் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நீங்கள் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவேளி உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றாமலும் செயல்பட்டால் உங்கள் உயிர்களுக்கு மட்டுமல்லாமல் மற்றவர்களின் உயிர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறீர்கள் என்று அர்த்தம். இந்த ஆண்டு இந்தியா பல்வேறு சவால்களைச் சந்தித்துள்ளது. பூகம்பம், புயல், வெட்டுக்கிளிகள் தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கொரோனா பரவல் எப்போது முடியும் என்பதுதான் மக்கள் பலரும் பேசும் விஷயமாக இருக்கிறது. இந்த ஆண்டின் முதல் பாதி நாட்கள் இப்படி இருக்கிறது என்பதற்காக இனி வரும் நாட்களும் அப்படி இருக்கும் என்றில்லை. கொரோனா வைரஸ் நாம் வாழக்கூடிய சூழ்நிலையை நிச்சயமாக மாற்றியிருக்கிறது.

கவனமாக இருங்கள்

பிரச்சனையை எப்போதும் தனக்கான வாய்ப்பாகவே நாடு மாற்றியுள்ளது. சவால்களை எதிர்கொண்ட பிறகு நாம் வலிமையாக மாறியிருக்கிறோம். ஊரடங்கு முடிந்து இயல்பு நிலைக்கு திரும்பும்போது மக்கள் மீண்டும் கவனமாக இருக்க வேண்டும். கொரோனாவை கடந்து நாம் வெற்றி நடை போடுவோம். மஞ்சள், இஞ்சி உள்ளிட்டவற்றுக்கான தேவை உலக அளவில் அதிகரித்திருக்கிறது. இந்திய பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றன.

வேடிக்கை பார்க்க மாட்டோம்

நமது சுயமரியாதை, இறையாண்மை மற்றும் எல்லையை பாதுகாப்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது. நட்பை பெறுவது எப்படி என்றும் இந்தியாவுக்கு தெரியும், கண்ணுக்கு கண் என்று வந்தால் பதிலடி கொடுக்கவும் இந்தியாவுக்கு தெரியும். லடாக்கில் எல்லையை ஆக்கிரமிக்க முயன்றவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் யாரும் மோத முடியாது. நாட்டின் எல்லைகள் காக்கப்படும். எல்லையில் உயிரிழந்த ராணுவ வீரர்களை நினைத்து ஒட்டுமொத்த தேசமும் பெருமை கொள்கிறது. உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மக்கள் வாங்க வேண்டும். தளவாட உற்பத்தியில் தன்னிறைவு பெற வேண்டும் என மதுரையை சேர்ந்த மோகன் கூறியுள்ளார். மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் தளவாட உற்பத்தியில் நாம் முன்னணியில் இருக்கிறோம். சுயசார்பை நோக்கி நாடு முன்னேறி  கொண்டே இருக்கிறது. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here