காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் எடுத்ததற்காக வேதனைப்படுகிறேன் என சாத்தான்குளம் சம்பவத்தை சுட்டிக்காட்டி திரைப்பட இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தந்தை, மகன் மரணம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஊரடங்கின்போது கடை திறக்கப்பட்ட விவகாரத்தில் சாத்தான்குளம் போலீஸார் கடையின் உரிமையாளரான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸை காவல் நிலையம் அழைத்துச் சென்று தாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையே, கிளைச் சிறையில் விசாரணைக் கைதியாக இருந்த பென்னிக்ஸுக்கும், அவரது தந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

குற்றச்சாட்டு, விசாரணை

ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தாக கூறி போலீசார் அடித்தே கொன்றுவிட்டதாக உறவினர்களும், ஊர் மக்களும் குற்றம்சாட்டி உள்ளனர். தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் சம்மந்தப்பட்ட 2 எஸ்.ஐ.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் உத்தரவுப்படி நீதிபதிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிக மிக வேதனை

சாத்தான்குளம் சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் தமிழ்த் திரையுலகப் பிரபலங்கள், பாலிவுட் பிரபலங்கள், இந்திய கிரிக்கெட் வீரர்கள் எனப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் இயக்குநர் ஹரி இதுதொடர்பாக கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிட கூடாது. அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே. காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுத்தி உள்ளது. காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படங்கள் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். சூர்யாவை வைத்து அடுத்தடுத்து சிங்கம் படத்தின் பாகங்களை உருவாக்கிய இயக்குநர் ஹரி, சிங்கம் 2 படத்தின் படப்பிடிப்பை பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் படமாக்கியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here