சுஷாந்தின் மரணத்தையொட்டி அமேசான் ப்ரைமில் தற்கொலை எண்ணங்களைப் பற்றிய டார்க் காமெடித் தொடர் ஒன்று ‘அஃப்ஸோஸ்’ என்ற பெயரில் வெளியாகியுள்ளது. முன்னால் இயக்குநர் ஒருவர் ‘டபங்க் 2’ விலிருந்து சல்மான் கான் குடும்பத்தால் தன் வாழ்க்கையே சீரழிந்துவிட்டது. நான் தொடர்ந்து போராடுவேன் என்று கூக்குரலிட்டு வருகிறார். இன்னோர் பிரபல இயக்குநரின் படம் நெட்ஃப்ளிக்ஸில் நேரடியாக வெளியாகியுள்ளது. அதன் கதாநாயகனுடைய பெயர் சுஷாந்த் பிள்ளை. ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் மூன்று பேரும் சகோதர\சகோதரிகள். ஒரே சூழலில் பிறந்த மூன்றுபேரின் தனித்தன்மை வெற்றி\தோல்வி பற்றிப் பார்ப்போம்.

அனுபுதியின் அடையாளம்

ஐடி வேளையை விட்டுவிட்டு அண்ணன் அனுராகிடம்’தேவ் டி’, ‘கேங்க்ஸ் ஆஃப் வசேபூர்’(3 பாகங்கள்) உதவி இயக்குநராக வேலை பார்த்த அனுபுதி இன்னோர் கதைசொல்லியை திருமணம் செய்துகொண்டார். ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்ததைப் பார்த்து பூரித்துப்போய் முதல் படம் எடுக்கத் தயாரென்றால் அதை நானே தயாரிக்கிறேன் என்ற அண்ணனின் அன்புக் கட்டளையை நிராகரித்துவிட்டு  நாங்கள் எங்களுக்கான தனி அடையாளத்தைத் தேடிச் செல்கிறோம் என்று சொல்லி அங்கிருந்து கிளம்பிவிட்டார். அவரது வெற்றி அவரை எங்கு கொண்டு செல்கிறது. அதைத் தொடர்ந்து வரும் வெளிச்சத்தை அவர் எப்படிக் கையாள்கிறார் என்பதைப் பொருத்திருந்து பார்ப்போம்.

அபிநவ்வின் அனுதாபம்

அண்ணனைப் போலவே முதலில் தொலைக்காட்சித் தொடர்களில் இயங்க ஆரம்பித்த அபிநவ் முதலில் சஞ்சய் தத் நடித்த ’ஜங் ’ படத்தில் கதாசிரியராக சேர்ந்தார். பின் மணிரத்னத்தின் ‘யுவா’ படத்தில் உதவி இயக்குநராகச் செயல்பட்டார். சின்ன வேடமும் ஏற்று நடித்தார். 2010ல்  சல்மான் கானின் ‘டபங்க்’ மூலம் இயக்குநராக முதல் வெற்றி. தொடர்ந்து 2012ல் டபங் 2-ல் சல்மான் கானின் தம்பிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தால் அவர் படத்திலிருந்து விளக்கப்பட்டார். சல்மானின் தம்பி அர்பாஸ் கான் படத்தைத் தயாரித்து இயக்கினார். அடுத்து 8 வருடங்களில் தனக்கு வர வேண்டிய பட வாய்ப்புகளில் தொடர்ந்து சல்மான் குடும்பத்தினர் மண்ணள்ளிப்போட்டுள்ளனர். அதனால்  நடிகர் சுஷாந்த் மரணத்தில் அவர்களது பெயர் அடிபடுவது எனக்கு எந்த ஆச்சரியத்தையும் அளிக்கவில்லை என்று பகிரங்கமாகப் பேட்டியளித்துள்ளார். இவர்களால்தான் என் மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து வாழமுடியாமல் நான் தவிக்கிறேன் என்று குற்றம் சாட்டியுள்ளார். அவரது மனைவி சாருதா ராவ் ஒரு எழுத்தாளராக  நிறைய விருதுகளை வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சல்மானின் தந்தை சலீம் பாலிவுட்டில் பெரிய கை. இதையெல்லாம் பற்றிப் பேசி என் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்ற அதே நேரத்தில் அவரது மற்ற மகன்கள்  அபிநவ் மேல் அவதூறு வழக்குகள் தொடுத்துள்ளனர்.

அனுராகின் அபிமானம்

தம்பியையும், தங்கையையும் போலவே மேடை நாடகம், தெருக் கூத்துக்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்று எழுதியும், நடித்தும் வந்த அனுராகிற்கு நடிகர் மனோஜ் பாஜ்பேயின் மூலம் ராம் கோபால் வர்மாவின் அறிமுகம் கிடைத்தது. கேங்ஸ்டர் கல்ட் கிளாசிக்கான ‘சத்யா’வில் பகுதி எழுத்தாளராக பணியாற்றினார். மணிரத்னத்தின் ‘யுவா’வில் வசனம். முதலில் திரைத் துறைக்கு வந்தவர் என்றாலும் பல தோல்விகளுக்குப் பிறகு 2009ல்தான் இயக்குநராக முதல் வெற்றி ‘தேவ்-டி’ படம் மூலமாக. கிட்டத்தட்ட அபிநவ் அனுபவித்த எல்லாவிதமான அடக்குமுறைகளையும் அபே தியாலிடம் அனுராகும் சந்திக்க நேர்ந்தது . ஆனால் கெட்டதிலும் நல்லதாக கல்கி கோச்சேனைச் சந்திக்கக் கிடைத்த சந்தர்ப்பமாக அதை எடுத்துக்கொண்டார்.

கல்லூரித் தோழியான ஆர்த்தி பஜாஜ் அவருடைய படங்களில் எடிட்டராகப் பெரும் பொறுப்பு வகித்தவர். அவர்களுக்கு ஆலியா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். ஆனால் கல்கியுடன் காதல் மலர்ந்ததும் அவர் ஆர்த்தியுடனான திருமணத்தைவிட்டு வெளியில் வந்துவிட்டார். சில வருடங்களில் கல்கியுடனும் மனஸ்தாபம் ஏற்பட பிரிந்து இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்களாக வசித்தார்கள். மீண்டும் இன்னொரு பெண்ணுடன் காதல் வயப்பட இருவரும் முறைப்படி விவாகரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

“அனுராகை யார் வேண்டுமானாலும் கோபமூட்டிவிடலாம். உடனே அவர் ட்விட்டரில் இறங்கித் தெருச்சண்டை போடுவது எங்களுக்குள் விரிசலை ஏற்படுத்தியது” என்றார் கல்கி.

தொடர்ந்து அரசின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி குறித்து சமூக வலைதளங்களில் போன்ற முடிவுகளை எதிர்த்து பதிவுகள் இட்டுக்கொண்டே இருந்தவர் திடீரென அந்தர் பல்ட்டி அடிக்கும் வகையில் கிட்டத்தட்ட அதை ஆதரிக்கும்படியான ஒரு படத்தை ‘சோக்ட்- பைசா பேசுகிறது’ நெட்ஃப்ளிக்ஸில் வெளியிட்டுள்ளார்.

அப்பா, அம்மா, மகள் என்று எல்லோருக்கும் அளிக்கப்பட்ட மிரட்டல்களால் பின்வாங்கிவிட்டார் என்று சிலர் அபிப்ராயப்படுகின்றனர். இதற்கிடையில் அனுராகின் ஆரம்ப நாட்களிலிருந்து அவருடைய வளர்ச்சியில் உறுதுணையாக இருந்துவந்த ஒளிப்பதிவாளர் நட்டி என்ற நட்ராஜ் அனுராக் சுய நலமாக நடந்துகொள்கிறார். அவரை வளர்த்துவிட்ட நண்பர்களை மறந்துவிட்டார் என்று பதிவிட்டதற்கு பதிலளிக்கும் வகையில் உடனே ‘இது இரு நண்பர்களுக்கு இடையான ஊடல். நண்பனை அழைத்துப் பேசிவிட்டேன். என்னைப் பல இடங்களுக்கு அழைத்துச்சென்று அறிமுகம் செய்து வைத்தவர் நட்டி.அவர் எனக்கு குரு போன்றவர். அவரது கோபம் நியாயமானது. அவருக்கு என்னைத் திட்ட எல்லா உரிமையும் இருக்கிறது. இதையே எனது அதிகாரப்பூர்வமான பதிலாக ஊடகங்கள் எடுத்துக்கொள்ளலாம்’ என்று பக்குவமாகப் பதிவிட்டுள்ளார்.

”தம்பி, தங்கையைப் பற்றிய கேள்விகளுக்கு இரண்டுபேருமே என்னுடைய நிழலைவிட்டு தங்களுக்கான அடையாளத்தைத் தேடிச் சென்றவர்கள். அதனால் அவர்களது முடிவுகளுக்கும் அதுசார்ந்த வெற்றிகளுக்கும், பிரச்னைகளுக்கும் அவர்களே முழு பொறுப்பு.இதையே எனது அதிகாரப்பூர்வமான பதிலாக ஊடகங்கள் எடுத்துக்கொள்ளலாம்” என்று மீண்டும் பிரச்சனையிலிருந்து விலகும்விதம் பதிலளித்துள்ளார்.

யார் சிறந்த படைப்பாளி?

ஒரு குறிப்பிட்ட புள்ளியைப் பற்றிய விவரத்தை அறிய அதைச் சுற்றியுள்ள 3 புள்ளிகளை வெவ்வேறு விதமாக இணைத்து பல முக்கோணங்களை வரையும் உத்தியை ட்ரையாங்குளேஷன் என்பர். தகவல்த் தொடர்பு, கட்டிடக்கலை உள்ளிட்ட பல துறைகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள்.கூகில் மேப்புகள் இயங்குவது இப்படித்தான். அப்படி வெற்றி என்ற ஒரு புள்ளியை வைத்து அனுராக், அனுபுதி, அபிநவ்வின் படைப்புகளை இணைத்து இதுபோன்ற முக்கோணங்களை வரைந்துபார்த்தோமானால் மூன்று விசயங்கள் தெளிவாகப் புரியும். காய்த்த மரம் கல்லடி படும். வளையாத மரங்கள்தான் புயலில் வேரோடு சாயும். தனித்தன்மையை மட்டும் இழக்காமல் பார்த்துக்கொண்டால் எப்பேற்பட்ட இக்கட்டிலிருந்தும் மீண்டுவரலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here