தமிழகத்தில் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல்

சென்னை வேளச்சேரியில் உள்ள குருநானக் கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்கான மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்களாலேயே தமிழகத்தில் கொரோனா பரவியது என்றார். மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியால் தான் குணமடைபவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகமாக உள்ளதாக கூறினார்.

மக்களை சிரமப்படுத்த அல்ல

முதலமைச்சர் பழனிசாமி மேலும் கூறுகையில்; இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகளவில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொரோனா ஒழிக்க அமல்படுத்தப்பட்டிருக்கும் முழு ஊரடங்கிற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். கொரோனாவை தடுக்கவே மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மக்களை சிரமப்படுத்த அல்ல. கொரோனா எப்போது ஒழியும் என்பது கடவுளுக்குத் தான் தெரியும். மக்கள் வெளியில் நடமாடுவதை குறைத்தால், நோய் பரவலை குறைக்கலாம். சென்னையில் ஏன் முழு ஊரடங்கு என சில கட்சி தலைவர்கள் கேட்கின்றனர். நோய் பரவலை கட்டுப்படுத்த தான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. நோய் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிக்கு அனைத்து கட்சி தலைவர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

ஊரடங்கு நீட்டிப்பா?

மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. தனக்கு, கொரோனா இல்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் மறுத்துள்ளார். சென்னையில் இருந்து வெளியே செல்பவர்களால் தான் பிற மாவட்டங்களில் கொரோனா பரவுகிறது. வெளியூர் செல்லாமல், சென்னை மக்கள் இங்கேயே தங்கியிருந்தால் தான் பரிசோதனை செய்ய முடியும். இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here