கொரோனா தொற்று தொடர்ந்து சென்னைபோன்ற பெரு நகரங்களில் ஏறுமுகத்தில் உள்ளதால் ஐந்தாம் கட்டமாக முழு ஊரடங்கு ஜூன்19 தேதி முதல் 30 வரை அமலுக்கு வருகிறது. வீட்டிலிருந்து வேலை செய்பவர்கள் எந்தமாதிரியான படங்களை தொடர்களைப் பார்த்துப் பயனடையலாம் என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாகி வருகிறது. எங்களது பரிந்துரைகள் இதோ.

அமேசான் பிரைம்

தமிழ்ப் படங்களைப் பொருத்த அளவில் புதுமுக இயக்குநர் ஜே.ஜே.ஃப்ரெட்ரிக் இயக்கி ஜோதிகா நடிப்பில் நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான படம் ’பொன்மகள் வந்தாள்’. அதையடுத்து கீர்த்தி சுரேஷ்  நடிப்பில் ஈஸ்வர் கார்த்திக் என்ற மற்றொரு புதுமுக இயக்குநரின் ’பெண்குயின்’ OTTயில் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகள் மீண்டும் எப்போது திறக்கும். அப்படியே திறந்தாலும் இயல்பு நிலைக்கு வர இன்னும் எவ்வளவு நாள் பிடிக்கும் என்பது நிச்சயம் இல்லாத சூழலில் சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் போன்ற பிரபலங்கள் தங்களது படங்களை நேரடியாக OTT தளங்களில் வெளியிடுவதை முன்னெடுத்துள்ளனர். இதுகுறித்து தியேட்டர் உரிமையாளர்களிடம் இருந்து எதிர்ப்பு வலுத்து வருகிறது. வரும் நாட்களில் இதுபோன்ற வெளியீடுகளின் சாதக பாதகங்களைப் பொருத்து அடுத்தடுத்த படங்களை திரையரங்கில் வெளியிடும் நாளை எதிர் நோக்கிக் காத்திருப்பது குறித்து ஒரு முடிவைத் திரைத்துறை சீக்கிரமே எட்டும் என்று எதிர்பார்ப்போம்.

நெட்ஃப்ளிக்ஸ்

மலையாளத்தில் நடிகை மம்தா மோஹன்தாஸ் நடித்து அன்மையில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட திரில்லர் படமான ‘ஃபோரன்ஸிக்’  ஊரடங்கின் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் இப்போது  நெட்ஃப்ளிக்ஸில் காணக்கிடைக்கிறது. புதுமுக இயக்குநர்களான அகில் பால் – அனாஸ் கான் கூட்டணிக்கு இது அடுத்தடுத்த வாய்ப்புகளை ஏற்படுத்துத்தரும் சாத்தியத்தை அதிகப்படுத்தியுள்ளது.

ஹாட் ஸ்டார்

வேகமாக வளர்ந்து வந்த இளம் ஹிந்தி நடிகர்களுள் ஒருவரான சுஷாந்த் சிங்கின் அகால மரணத்தையொட்டி சர்ச்சைகள் தினம் தினம் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. அவர் நடித்த கடைசிப் படமான ‘தில் பேசாரா’ இன்னும் வெளியாகாத நிலையில் அந்தப் படத்திற்கு இசையமைத்த இசைப்புயல் ஏ.ஆர்.ரஹமான் ஒரு சிறந்த நடிகனுக்கு மறியாதை செய்யும் வகையில் அந்தப் படத்தை OTTயில் வெளியிடாமல் திரையரங்குகளில் காத்திருந்து வெளியிடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தோனியாக நடித்து ரசிகர்கள் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்த சுஷாந்த், தற்கொலை முயற்சிக்கு எதிரான கருத்தை முன்வைக்கும் ‘சிச்சோரே’யில் நடித்து 100 கோடி வசூல் சாதனை படைத்தது. இதுவரை அதைப் பார்க்காதவர்கள், முக்கியமாகப் பொதுத்தேர்வு முடிவுகளை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்கள் ஹாட் ஸ்டாரில் அந்தப்படத்தை ஒருமுறை பார்த்துவிடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here