சுஷாந்த் சிங் மரணமடைந்ததால் தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டுவிட்டதாக தயாரிப்பாளர் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

சுஷாந்த் சிங்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். சின்னத்திரையில் இருந்து படிப்படியாக வெள்ளித்திரைக்கு வந்த அவர், கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். 2016ம் ஆண்டில் வெளியான இத்திரைப்படத்தில் அவரது அபார நடிப்பு அனைவரையும் அசரவைத்தது.

அபார நடிப்பு

சுஷாந்த் சிங்கின் கடுமையான உழைப்பின் காரணமாகவே அப்படம் அனைத்துத் தரப்பு மக்களிடமும் மாபெரும் வரவேற்பைப் பெற்று ஒரு மிகப்பெரிய வெற்றி பெற்றது. “M.S. Dhoni The Untold Story” படத்தில் தோனியின் குழந்தைப் பருவம் தொடங்கி, கால்பந்து கோல்கீப்பர், கிரிக்கெட் விக்கெட் கீப்பர், உள்ளூர் தொடர், கிரிக்கெட் வெற்றி – தோல்வி, காதல், முதல் உலகக்கோப்பை வென்றது வரை தன் அபார நடிப்பால் தோனியையே கண்முன் நிறுத்தியிருந்தார் சுஷாந்த் சிங் ராஜ்புட்.

இரண்டாம் பாகம்

இந்நிலையில், உலகக்கோப்பைக்கு பின்னர் தோனியின் வாழ்க்கையில் நடந்த கிரிக்கெட் மற்றும் சொந்த அனுபவங்கள் குறித்து ‘தோனி 2’ படமாக தயாரிக்க தயாரிப்பாளர் அருண் பாண்டே முடிவு செய்திருந்தார். அதற்கான திரைக்கதை அமைக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. தற்போது சுஷாந்த் சிங் மரணமடைந்துவிட்டதால், அவர் அளவுக்கு அந்த கேரக்டரை உள்வாங்கி நடிப்பதற்கு ஆளே இல்லை என்றும் அதனால் தோனி 2 படம் எடுக்கும் முடிவை கைவிட்டுள்ளதாகவும் அருண் பாண்டே தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் ஏமாற்றம்

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவர் தோனி. இவருக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ள நிலையில், தோனியின் வாழ்க்கையை மையமாக கொண்டு சுஷாந்த் நடிப்பில் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவந்த MSDhoni The Untold Story பாகம் 1 ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. ரசிகர்கள் அனைவரும் இரண்டாம் பாகம் வெளிவரும் என ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில், நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மரணத்தால் ஏற்பட்டுள்ள சோகம் மட்டுமின்றி, ரசிகர்களின் இரண்டாம் பாகத்தின் ஆசையும் தகர்ந்துவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here