இந்தியா அமைதியை விரும்பும் நாடாக இருந்தாலும், அத்துமீறினால் தக்க பதிலடி கொடுக்கும் என சீனாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மறைமுக எச்சரிக்கை விடுத்தார்.

முதல்வர்களுடன் மோடி ஆலோசனை

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக தமிழ்நாடு, மஹாராஷ்டிரா, டெல்லி, உத்தரப் பிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா உள்ளிட்ட 15 மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி அலோசனை மேற்கொண்டார். அப்போது லடாக் பகுதியில் ஏற்பட்ட மோதலின்போது வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

சீனாவுக்கு எச்சரிக்கை

அதனைத்தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்; எல்லையை காக்கும் முயற்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் சண்டையிட்டு உயிர் தியாகம் செய்துள்ளனர். அவர்களின் உயிர் தியாகம் வீண் போகாது. பலசாலியான இந்தியா மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். எந்த காலத்திலும் பதிலடி கொடுப்பதை நிறுத்த மாட்டோம். இந்தியா எப்போதும் அமைதியை விரும்பும் நாடு தான். அதேநேரத்தில் அத்துமீறினால் எந்தவொரு சூழலிலும் தக்க பதிலடி கொடுக்கும் பலம்வாய்ந்த நாடாகும்.

வேடிக்கை பார்க்க மாட்டோம்

இந்தியாவின் துணிச்சல் மற்றும் வீரத்தை பற்றி உலகிற்கே தெரியும். நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை மிகவும் முக்கியமானதாகும். இந்தியாவை கோபப்படுத்தும் நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். ஆத்திரமூட்டம் நடவடிக்கையில் ஈடுபட்டால் இந்தியா அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.

உண்மையை சொல்லுங்கள்

இதனிடையே, ராணுவ வீரர்களின் உயிர்த் தியாகம் நாட்டின் மனசாட்சியை உலுக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ராணுவ வீரர்கள் மரணமடைந்தது பற்றியும், இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்தது பற்றியும் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உண்மையைத் தெரிவிக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here