நிலவின் நிழல் புவியை மறைக்கும்போது ஏற்படும் வானியல் நிகழ்வே சூரிய கிரகணம் எனப்படும். இன்னும் சரியாகச் சொன்னால் சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் சரியாக ஒரே நேர்க்கோட்டில் வரும் அரிய நிகழ்வையே சூரிய கிரகணம் என்கிறோம். இதை விஞ்ஞானத்தில் கதிரவ மறைப்பு அல்லது சூரிய கிரகணம் (Solar eclipse) என்று வரையறை செய்கிறார்கள். எனவே புதுநிலவு என்று சொல்லப்படும் நாளில்தான் இந்த சூரிய கிரகணம் ஏற்படுகிறது.

முதல் கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வருகிற 21 ஆம் தேதி ஏற்பட இருக்கிறது. நிலவின் நிழல் பூமியை மறைக்கும் இவ்வரிய நிகழ்வு 21 ந்தேதி ஞாயிற்றுக்கிழமை காலை மணி 10.19 மணிக்குத் தொடங்கி பகல் 12 மணிக்கு உச்சம் அடையும். தொடர்ந்து படிப்படியாக குறைந்து, நண்பகல் 1.45 மணிக்கு நிறைவுறும். இந்த சூரிய கிரகணம் தமிழ்நாட்டில் 50% மட்டுமே தெரியும். ஆன்மீக ரீதியாக இந்நாளில் நாம் உடல் சுத்தம் மற்றும் மனச்சுத்தத்தோடு இருப்பது அவசியமாகக் கருதப்படுகிறது.

தர்ப்பணம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இது என்பதால், அன்றைய தினம் சர்வ பித்ருக்களுக்குத் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்று காலை 5.45 மணிக்கு சந்தியாவந்தனம் செய்ய வேண்டும். தொடர்ந்து காலை 10.20 மணிக்கு குளித்து முடித்து, காயத்ரி ஜெபம் செய்தல் நலம்தரும். பகல் 12 மணிக்கு சர்வ பித்ரு தர்ப்பணம் செய்தல் அவசியமாகும். சூரிய கிரகணம் முடிந்ததும் ஸ்நானம் செய்ய வேண்டும். மிருகசீரிஸம், சித்திரை, அவிட்டம், திருவாதிரை, ரோகிணி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் பரிகாரம் செய்துகொள்வது நன்மை அளிக்கும். அன்றைய தினம் துர்க்கை அம்மனுக்கு வெள்ளை மொச்சையும், ராகு பகவானுக்கு கருப்பு நிற உளுந்தம் பயிறும் படைத்து, அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

விளக்கேற்றுங்கள்

விரத காலங்களில் எவ்வாறு தூய்மையோடும், புனிதத்தோடும் இருப்போமோ அதைப்போலவே சூரிய கிரகணத்தின்போதும் இருக்க வேண்டும். வீட்டில் நீர் மற்றும் உணவுப்பதார்த்தங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களிலும் தர்ப்பை புல்லை நுனிக்கிப்போட வேண்டும். மேலும் கிரகணம் முடிந்தவுடன் வீட்டைச் சுத்தப்படுத்தி, சுவாமி படத்திற்கு புஷ்பமிட்டு, விளக்கேற்றி வைத்து வழிபட வேண்டும்.

கர்ப்பிணிப் பெண்கள் கவனம்

சூரியனின் ஒளி பூமியின்மீது விழுவது தடுக்கப்படுவதால் இயற்கையில் சிற்சில மாற்றங்கள் ஏற்படும். அம்மாற்றங்கள் நமக்கும் தாக்கத்தைத் தரும். பொதுமக்களைவிட கர்ப்பிணிப் பெண்கள் மிகக் கவனத்தோடு இருக்க வேண்டும். கிரகண தினத்தன்று அவர்கள் வெளியில் போவதை தவிர்த்தல் அவசியம். அதையும் தாண்டி வெளியில் போனால் கர்ப்பத்தில் இருக்கிற குழந்தைகளின் உடல்நிலையில் சில விரும்பத்தகாத விளைவுகள் ஏற்படும் என்பது ஜதீகம். எல்லாவற்றுக்கும் மேலாக அன்றைய தினம் முழுவதும் இறைச்சிந்தனையோடு இருத்தலே சாலச்சிறந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here