இயக்குநர் ஷங்கர் மனம் வைத்தால் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ‘ஈரம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என அப்படத்தின் இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

2ம் பாகம் படங்கள்

தமிழில் 2ம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், காஞ்சனா, திருட்டுப்பயலே, சாமி, பில்லா, வேலையில்லா பட்டதாரி, அரண்மனை, சண்டக்கோழி, விஸ்வரூபம், கோலி சோடா, மாரி, தமிழ்படம், கலகலப்பு உள்ளிட்ட பல படங்கள் 2ம் பாகமாக வந்துள்ளன. சிங்கம் 3ம் பாகம் வரை வந்துள்ளது. இவற்றில் சில படங்கள் நல்ல வசூல் சாதனை படைத்துள்ளது. சில படங்கள் தோல்வி அடைந்தன. தற்போது அரண்மனை படத்தின் 3ம் பாகம் தயாராகிறது. விஜய் சேதுபதியின் சூதுகவ்வும் மற்றும் இன்று நேற்று நாளை ஆகிய படங்களின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் முயற்சிகளும் நடக்கின்றன.

‘ஈரம்’

ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கிய படம் ‘ஈரம்’. இறந்த பெண்ணின் ஆவி தண்ணீரில் புகுந்து பழிவாங்கும் விதமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் வரவேற்பும் பெற்றது. ‘ஈரம்’ படத்தில் ஆதி, நந்தா, சிந்து, லட்சுமி ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்குப் பிறகு ‘வல்லினம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’ ஆகிய படங்களை இயக்கினார் அறிவழகன். தற்போது அருண் விஜய் நடித்து வரும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தலால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ‘ஈரம்’ படத்தின் 2ம் பாகம் இயக்க ரெடியாக இருக்கிறார் இயக்குநர்.

‘ஈரம் 2’

இதுதொடர்பாக இயக்குநர் அறிவழகன் சமீபத்தில் அளித்த பேட்டியில்; ‘ஈரம்’ வெளியான 10 நாட்களிலேயே, அதன் 2-ம் பாகம் குறித்து யோசனை வந்தது. அது ஆர்வத்தைத் தூண்டும் தொடர்ச்சியாகவும், முதல் பாகத்திலிருந்து முற்றிலுமாக வேறுபட்டு, எதிர்பாராத ஒன்றாகவும் இருக்கும். ஆனால், முதல் பாகத்தைத் தயாரித்த ஷங்கர் சார் தயாரித்தால் மட்டுமே ‘ஈரம் 2’ உருவாகும் என்பது உறுதி. அவர்தான் என் குரு, என் முதல் படமான ‘ஈரம்’ படம் உருவானதற்குப் பின்னால் இருந்தவரும் அவரே. எனவே, அதன் 2-ம் பாகத்தை எடுத்தால் அதை எஸ் பிக்சர்ஸ் பெயரின் கீழ் மட்டுமே எடுப்பேன். ஷங்கர் சார் தயாரிக்கத் தயாராகும் போது ‘ஈரம் 2’ படத்தை எதிர்பார்க்கலாம். இவ்வாறு இயக்குநர் அறிவழகன் தெரிவித்துள்ளார்.

ரசிகர்களிடம் வரவேற்பு

தமிழ் சினிமாவில் நம்பர்-1 இயக்குநராக வலம் வருபவர் ஷங்கர். இவர் இயக்கத்தில் வெளிவந்த ஒவ்வொரு படங்களும் வசூல் ரீதியாக பெரிய வெற்றிகளை குவித்தது. அந்த வகையில் ஜென்டில்மேன், முதல்வன், இந்தியன், சிவாஜி, நண்பன் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் படம் இயக்குவது மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் பல்வேறு விதமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் ஷங்கர். அந்த வகையில் காதல், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி போன்ற படங்கள் அடங்கும். இந்த படங்களை போல் வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ஈரம் திரைப்படம், ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அனேகமாக ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு இந்த படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here