பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துக் கொண்டுள்ள நிலையில், இறப்பில் அமைதியை தேடுபவர்கள், வாழ்வில் தேடாதது ஏன்? என்று நடிகை அமலாபால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்கொலை

பிரபல இந்தி நடிகரும் மகேந்திர சிங் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான “தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி” திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவருமான இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நேற்று தற்கொலை செய்துகொண்டார். மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் சுஷாந்த்தின் உடல் கண்டெடுக்கப்பட்டது. சுஷாந்த் சிங் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ள நிலையில், அதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

படிப்படியாக உயர்ந்தவர்

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமான சுஷாந்த் சிங், 2013 ஆம் ஆண்டு இந்தியில் வெளியான, “காய் போ சே” திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து பி.கே, ராப்தா, கேதர்நாத் உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்தார். இவர் தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக அறியப்பட்டார். பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகராக திகழ்ந்த சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இரங்கல்

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அரசியல் கட்சியினர், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் பலர் ஆழ்ந்த இரங்கலையும், கருத்துக்களையும் சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமலாபால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.

அமலாபால் கருத்து

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ஒரு சிலர் தாங்கள் வாழும் மதிப்புமிக்க வருடங்களை இழந்துவிட்டு இறப்பில் அமைதியை தேடுகின்றனர். ஆனால் ஏன் நீங்கள் வாழும் போது அமைதியாக, நிம்மதியாக வாழ முயற்சிக்க கூடாது? இந்த உலகம் உங்களுக்காக நிறைய செய்வதற்காக காத்திருக்கிறது என்று கூறியுள்ளார். அமலாபாலின் இந்த பதிவில் சுஷாந்த் சிங்கின் பெயர் இல்லை என்றாலும், அவர் மரணமடைந்த சில மணி நேரத்தில் இந்த பதிவை பதிவு செய்துள்ளதால் சுஷாந்த் சிங் தற்கொலை குறித்து தனது எண்ணத்தை அமலா பால் தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here