கொரோனா லாக்டவுன் காலத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்துரையாடல் நடத்தியுள்ளார் நகைச்சுவை நடிகர் சூரி.

நகைச்சுவை நடிகர்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியன்களில் ஒருவர் சூரி. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடியனாகவும், குணச்சித்திர வேடங்களிலும் சிறப்பாக நடித்து வருகிறார். இந்த கொரோனா லாக்டவுன் நேரத்தில் சூரி தனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகிறார். மேலும் கொரோனா விழிப்புணர்வுக்காக பல்வேறு விஷயங்களையும் செய்து வருகிறார்.

ஆன்லைனில் கலக்கிய சூரி

கொரோனா லாக்டவுன் அமல்படுத்தப்பட்ட பிறகு நடிகர் சூரி தனது குழந்தைகளுடன் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறார். அவர்களுக்கு பல விஷயங்களை சொல்லிக் கொடுப்பது, விளையாடுவது போன்ற வீடியோக்களை இதற்கு முன்பு டுவிட்டரில் வெளியிட்டு வந்தார். அதன்பிறகு போலீஸ் அதிகாரிகளிடம் நேராக சென்று ஆட்டோகிராப் வாங்கி அவர்களது சேவைக்கு பாராட்டு தெரிவித்தார். அந்தவகையில் தற்போது சூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் எடுத்து இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

“சிரிப்போம் சிந்திப்போம்”

மதுரை மாநகராட்சியின் உதவியுடன் நடிகர் சூரி பள்ளி மாணவர்களுக்கு ‘சிரிப்போம் சிந்திப்போம்’ என்ற பெயரில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடத்தியுள்ளார். இதில் சூரி தன் வாழ்க்கையில் நடந்த விஷயங்கள் பற்றியும் பேசி உள்ளார். கல்வியின் முக்கியத்துவம், விடாமுயற்சி உட்பட பல விஷயங்கள் பற்றி மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதத்தில் பேசினார் சூரி. மேலும் மாணவர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் பாணியில் நகைச்சுவையாக பதில் அளித்தார். கொரோனா ஊரடங்கு ஆரம்ப கட்டத்திலிந்து சூரி தன் குழந்தையுடன் இணைந்து பல விழிப்புணர்வு செய்த காரணத்தால், சூரிக்கு பள்ளி மாணவர்களுடன் நேரடியாக ஆன்லைனில் உரையாடும் பக்குவமும், வாய்ப்பும் கிடைத்துள்ளது.

வாய்ப்பு கிடைத்தது எப்படி

மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் தான், இதனை ஏற்பாடு செய்யும்படி கல்வித்துறைக்கு வேண்டுகோள் வைத்தார். அதை ஏற்று மதுரை மாவட்ட கலெக்டர் வினய், இந்த நிகழ்ச்சியை துவங்கி வைத்தார். ஜூன் 4-ல் துவங்கிய இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சி 16 ஆம் தேதி வரை நடைபெறும். சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முன்னணியில் இருக்கும் பிரபலங்களை, மாணவர்களுடன் அதிகாரிகள் பேச வைக்கின்றனர். மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்க இது உதவும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். துவக்கத்தில் 10 முதல் 14 வயது உடைய மாணவர்களுக்கு மட்டும்தான் இந்த நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அதன்பின் அது எட்டாவது மற்றும் ஒன்பதாவது வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் என்று மாற்றப்பட்டது. சுமார் 3 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

பாராட்டு

தற்போது நடிகர்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சூரி நேரத்தை வீணாக்காமல் பள்ளி மாணவர்களுக்காக பயனுள்ள வகையில் செய்துள்ள இந்த விஷயத்தை நடிப்பு உலகில் உள்ளவர்களும், அரசு மற்றும் பொதுமக்களும் பாராட்டி வருகின்றனர். சூரி அடுத்து தன் கைவசம் பல படங்கள் வைத்திருக்கிறார். அதில் தல அஜித் நடிக்கும் வலிமை படமும் ஒன்று. இதில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் சூரி நடிப்பதாக கூறப்படுகிறது. லாக்டவுன் முடிந்து ஷூட்டிங் மீண்டும் துவங்கினால் சூரி நடிப்பில் பிஸி ஆகிவிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here