கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால் பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு வந்த நிலையில், விஜய் டிவி வருகிற திங்கட்கிழமை முதல் நேயர்களின் அபிமான தொடர்களை ஒளிபரப்பு செய்ய உள்ளது.
படப்பிடிப்புகள் ரத்து
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 25ந் தேதி முதல் மே 31ந் தேதி வரை 4 கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஜூன் 30 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டதால், பல தொலைக்காட்சிகள் பழைய நிகழ்ச்சிகளை மறுஒளிபரப்பு செய்து வந்தன.
தமிழக அரசு அனுமதி
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்புகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது. இதனையடுத்து படப்பிடிப்புகளுக்கான பணியில் தொலைக்காட்சி நிறுவனங்கள் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவி வருகிற திங்கட்கிழமை முதல் நேயர்களின் அபிமான தொடர்களை ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது.
மீண்டும் படப்பிடிப்பு தொடக்கம்
இதுதொடர்பாக விஜய் டிவி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக விஜய் டிவி தனது தொடர்கள் நிகழ்ச்சிகளின் படப்பிடிப்புகளை நிறுத்தி வைத்திருந்தது. தற்போது படப்பிடிப்பிற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஷூட்டிங் தொடங்கவுள்ளது. இதனிடையில் நேயர்களின் அபிமான நிகழ்ச்சிகளான மகாபாரதம், சூப்பர் சிங்கர், லொல்லு சபா போன்ற நிகழ்ச்சிகள் மறு ஒளிபரப்பாகி வந்தது. மேலும் பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களும் ஒளிபரப்பாகி வந்தது.
புத்தம் புதிய மெகா தொடர்
விஜய் டிவி ஜூன் 08 திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு ‘செந்தூரப் பூவே’ என்ற புதிய மெகா சீரியலைத் தொடங்கவுள்ளது. செந்தூரப் பூவே ஒரு காதல் நிறைந்த குடும்ப நாடகம். பிரபல நடிகர் ரஞ்சித் மரியாதைமிக்க குடும்பத்தின் மூத்த மகனாக நடித்துள்ளார்.
நெடுந்தொடர்கள்
வரும் வாரம் முதல் விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, காற்றின் மொழி, ஆயுத எழுத்து, நாம் இருவர் நமக்கு இருவர், தேன்மொழி ஆகிய தொடர்கள் வழக்கம்போல் புதிய எபிசோடுகளுடன் ஒளிபரப்பாகும். நேயர்கள் தவறாமல் கண்டு மகிழலாம். இவ்வாறு விஜய் டிவி தெரிவித்துள்ளது.