சின்னத்திரை படப்பிடிப்புகளில் 60 பேர் வரை பணியாற்ற அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

படப்பிடிப்புக்கு அனுமதி

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று, சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்பை துவங்குவதற்கு கடந்த 21ந் தேதியன்று அனுமதி அளிக்கப்பட்டது.

கோரிக்கை

ஆனால், 20 நடிகர், நடிகை மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு படப்பிடிப்பை நடத்த இயலாத சூழ்நிலை உள்ளதாகவும், இதனை உயர்த்தி அனுமதிக்க வேண்டும் எனவும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

முதல்வர் உத்தரவு

அவர்களின் கோரிக்கை ஏற்று அதிகபட்சமாக 60 நடிகர், நடிகை, தொழில்நுட்ப பணியாளர்களை கொண்டு சின்னத்திரை படப்பிடிப்பை மே 31ந் தேதி முதல் நடத்த அனுமதித்து உத்தரவிடப்படுகிறது. சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிற மாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் ஒவ்வொரு சின்னத்திரை தொடரின் முழுப்படப்பிடிப்பிற்கும் ஒரு முறை மட்டும் முன் அனுமதி பெறுதல் வேண்டும்.

அறிவுறுத்தல்

சின்னத்திரை படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் அனைவரும் மத்திய, மாநில அரசுகள் அவ்வப்போது விதிக்கும் அனைத்து கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்ற வேண்டும். சின்னத்திரை தயாரிப்பாளர்கள் அதனை உறுதி செய்து கொண்டு படப்பிடிப்புகள் நடத்திட வேண்டும். இவ்வாறு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here