உச்சநீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் வழக்கு

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு மே 7ம் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மே 8ம் தேதி மாலையுடன் மதுபானக் கடைகள் மூடப்பட்டன. டாஸ்மாக் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

டாஸ்மாக் திறப்பு

இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில், இன்று காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன.

பல வண்ணங்களில் டோக்கன்

கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் டோக்கன் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர். 

கட்டுப்பாடுகள்

பின்னர் 10 மணிக்கு கடைகள் திறக்கப்பட்டதும், நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியை பின்பற்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டன. டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படும் என்றும் நாளொன்றுக்கு ஒரு கடையில் 500 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் கடைக்கு வரும் அனைவரும் முகக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூரில் கடைகள் இல்லை

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாததால் அங்குள்ள குடிமகன்கள் வேதனையில் உள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம், சட்டம் ஒழுங்கு நிலவரத்திற்கு ஏற்ப அந்தந்த மாவட்ட நிர்வாகம், டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்துள்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here