தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மது வாங்க வருவோருக்கு வயது வாரியாக நேரம் ஒதுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு

தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் மே 17ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில், மாநிலம் முழுவதும் செயல்பட்டு வந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டன.

மதுக்கடைகள் திறப்பு

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளில் கூட்டம் அலை மோதியது. இந்த நிலையில் கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் உள்ள மதுக்கடைகளுக்கு தமிழக எல்லைப் பகுதியில் உள்ள மக்கள் அதிக அளவில் செல்வதால் மாநிலங்களுக்கு இடையேயான மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் பெரும் சிரமம் ஏற்படுவதாக கூறி, தமிழக அரசு நாளை முதல் மதுக்கடைகளை திறப்பதாக அறிவித்தது.

சென்னையில் கடைகள் இல்லை

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே மதுபான கடைகள் திறக்கப்படும் என்றும் சென்னை மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்படாது எனவும் அரசு தெரிவித்துள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகள் நாளை திறக்கப்பட உள்ளதால், கூட்டத்தை கட்டுப்படுத்த தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

நேரக்கட்டுப்பாடு

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், நாளை ஒவ்வொரு டாஸ்மாக் கடைகள் முன்பும் 2 போலீசார் மற்றும் 4 ஊர் காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். மேலும் 50-வயதிற்கு மேல் உள்ளவர்கள் காலை 10 மணி முதல் பிற்பகல் 1  மணி வரை மதுவாங்க அனுமதிக்கப்படுவார்கள். 40 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரை அனுமதிக்கப்படுவார்கள். 40 வயதுக்கு உட்பட்டவர்கள் பிற்பகல் 3 முதல் 5 மணி வரை மதுபானங்கள்  வாங்க அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here