போராட்டம் நடத்தியவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அதிபர் டிரம்புக்கு எதிராக அமெரிக்காவின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
மரணம்
அமெரிக்காவின் மின்னசோட்டா மாநில தலைநகரான மினியாபொலிஸ் நகரத்தில், கருப்பினத்தை சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட் என்பவர், அம்மாகாண காவலர்கள் வன்முறையாக நடத்தியதால் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியானதையடுத்து, போலீசாரை கண்டித்து மினசோட்டாவில் போராட்டம் வெடித்தது.
தீவிரமடைந்த போராட்டம்
நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ் என அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது. போராட்டக்காரர்கள் சிலர் வெள்ளை மாளிகை முன்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஞாயிற்றுக்கிழமை மாலை வெள்ளை மாளிகை முன்பு திரண்ட ஏராளமானோர் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் அமைதியாக போராட்டம் நடைபெற்ற நிலையில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படுவதாக மேயர் அறிவித்தையடுத்து, மேலும் தீவிரமடைந்தது. அங்கிருந்த அதிகாரிகள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை கலைந்து போக செய்துள்ளனர்.
சர்ச்சை பேச்சு
இதுகுறித்து பேசிய அதிபர் டிரம்ப், போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த தன்னை அனுமதித்திருந்தால் நாய்களை ஏவிவிட்டு அவர்களை விரட்டியடித்திருப்பேன் எனக் கூறியுள்ளார். ஆனால் அதிகாரிகள் சிறப்பாக இந்த விவகாரத்தை கையாண்டனர் எனத் தெரிவித்துள்ளார். அதிபரின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு எதிராக பலர் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
பதுங்கு குழிக்குள் அதிபர்?
இந்த நிலையில், போராட்டக்காரர்கள் வெள்ளை மாளிகையை முற்றுகையிட்டதால், பாதுகாப்புக்காக அதிபர் டிரம்பை வெள்ளை மாளிகையில் உள்ள பதுங்கு குழிக்குள் அதிகாரிகள் கொண்டு சென்றதாக நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.