சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கியது.

ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும் 5ம் கட்டமாக ஜூன் 30ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் சில தளர்வுகளை அளித்து ஜூன் 30-ந் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

பேருந்து போக்குவரத்து

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 50 சதவீத பேருந்துகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டது. பொது பேருந்து போக்குவரத்தை இன்று முதல் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாவட்டங்கள்  8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டது.

பேருந்துகள் ஓடத் தொடங்கியது

இந்நிலையில் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தவிர்த்து பிற பகுதிகளில் அரசு பேருந்துகள் இன்று காலை முதல் ஓடத்தொடங்கின. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட மார்ச் 24-ந் தேதிக்கு பிறகு தமிழகத்தில் இன்று அரசு பேருந்துகள் இயங்கத் தொடங்கின. பயணிகள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி பயணிக்க அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

ரயில் சேவை

கோவையில் இருந்து காட்பாடி மற்றும் மயிலாடுத்துறை ஆகிய ஊர்களுக்கு 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், ஜோலார்போட்டை வழியாக காட்பாடி செல்லும் இன்டர்சிட்டி ரயிலில் 300 பயணிகள் பயணம் செய்கின்றனர். அதேபோல் 800 பயணிகளுடன் கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்பு ரயில் புறப்பட்டது. திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர் வழியாக இந்த ரயில் மயிலாடுதுறை சென்று சேரும். மதுரையில் இருந்து விழுப்புரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றன. காலை 7 மணிக்கு புறப்பட்ட ரயில் மதியம் 12 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here