ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்று நடிகர் விஜய் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முடங்கிய திரையுலகம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு இருக்கும் நிலையில், திரைப்படத்துறை பெரிய அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது. வெளியீட்டுக்கு தயாராக நிறைய படங்கள் வரிசைகட்டி காத்திருக்கின்றன. ஆனால் திரையரங்குகள் கொரோனா வைரஸ் காரணமாக எப்போது திறக்கப்படும் என்பது இன்னமும் கேள்விக்குறியாகவே இருக்கிறது.
திரையரங்கம்?
இந்நிலையில் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். திரையரங்குகள் எப்போது திறக்கப்படும் என்பது தெளிவாக தெரியாத காரணத்தினால், பல படங்கள் ஓடிடி வழியாக வெளியீடு செய்யப்படுகின்றன.
கடும் எதிர்ப்பு
சமீபத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா நடித்த ‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இடையே பெரும் பிரச்சனை மூண்டது. தங்களை காப்பாற்றிய திரையரங்குகளை மறந்துவிட்டு சூர்யா ஓடிடியில் படத்தை வெளியிடுகிறார். இது தவறு என்று தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் குற்றம்சாட்டினர்.
ஓடிடியில் படங்கள் வெளியீடு
‘பொன்மகள் வந்தாள்’ திரைப்படம் தவிர கீர்த்தி சுரேஷின் ‘பென்குயின்’ திரைப்படமும் ஓடிடி வழியாக வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் படங்கள் மட்டுமில்லாமல் அனுஷ்காவின் ‘நிசப்தம்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் மற்றொரு புதிய படம் ஆகியவையும் ஓடிடியில் வெளியிடப்பட வாய்ப்புகள் அதிகம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓடிடியில் ‘மாஸ்டர்’?
சமீபகாலமாக ஓடிடி பிளாட்பார்ம் மக்களிடம் அதிகமாக பிரபலம் அடைந்து வரும் நிலையில், பிரபல நடிகர்களும் தயாரிப்பாளர்களும் கூட தங்களுடைய முக்கியமான படங்களை ஓடிடியில் வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் பரவின. குறிப்பாக வெளியீட்டுக்கு தயார் நிலையில் இருக்கும் விஜய்யின் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாக அதிக வாய்ப்புகள் உண்டு என சொல்லப்பட்டது. இந்த நிலையில், தனது ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் அது திரையரங்குகளில் தான் வெளியாகும் எனவும் நடிகர் விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
விஜய் வாக்குறுதி
‘மாஸ்டர்’ திரைப்படத்தின் திரையரங்க உரிமையை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் உரிமையாளர் லலித் வைத்திருகிறார். கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் இயங்காததால் அவர் படத்தை வெளியிட முடியாமல் நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார். இருப்பினும் ‘மாஸ்டர்’ திரைப்படம் ஓடிடியில் வெளியிடப்படாது என்றும் இந்த காலகட்டத்தில் லலித் சந்திக்கும் நஷ்டத்துக்கு ஈடாக அவருக்கு தான் ஒரு படம் நடித்து கொடுக்கப் போவதாகவும் விஜய் வாக்குறுதி கொடுத்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
மகிழ்ச்சியில் ரசிகர்கள்
விஜய் ரசிகர்கள் ‘மாஸ்டர்’ திரைப்படத்தை திரையரங்குகளில் முதல் நாள் முதல் காட்சி பார்த்து கொண்டாட காத்திருக்கும் நிலையில், தன்னுடைய ‘மாஸ்டர்’ படம் ஓடிடியில் வெளியாகாது என்றும் ரசிகர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அது திரையரங்குகளில் தான் வெளியாகும் என்றும் விஜய் தெரிவித்திருப்பது அவருடைய ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி இருக்கிறது.