இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய வெற்றிப் படங்களில், இளம் நடிகர்களை வைத்து இயக்கிய சென்னை 28 படம் முக்கியமானது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகமும் ஓரளவு வெற்றி பெற்ற நிலையில், அப்படத்தின் மூன்றாம் பாகத்தை எடுக்க அவர் திட்டமிட்டு இருக்கிறார்.

ரிஸ்க் இல்லை

வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகத்தை எடுப்பது சமீபகாலமாக தமிழ் சினிமாவின் புதிய டிரெண்டாக இருக்கிறது. புதிதாக ஒரு படத்தை எடுப்பதைவிட, வெற்றிபெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறைந்த ரிஸ்க் ஆகவும், அதேநேரம் வெற்றிக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ள ஒரு சூத்திரமாகவும் இயக்குனர்கள் பார்க்கின்றனர்.

இரண்டாம் பாகம்

வெற்றிபெற்ற படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று என்றாலும், மூன்றாம் பாகம் எடுப்பது எப்போதாவது அரிதாக நடக்கக்கூடிய நிகழ்வுதான். ரஜினிகாந்தின் எந்திரன் படம் 2.0 என்ற பெயரில் இரண்டாம் பாகமாக வெளிவந்தது. அதேபோல் அஜீத்குமாரின் பில்லா படமும் இரண்டு பாகங்கள் வெளிவந்து வெற்றி பெற்றன. காஞ்சனா திரைப்படம் தொடர்ந்து வெற்றி பெற்றதால், அதன் மூன்றாம் பாகம் வெளிவந்தது. அந்தப் படமும் வெற்றி அடைந்தது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்ததால் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் எடுக்கப்பட்டு, மூன்றாவது பாகமும் வெளிவந்து வெற்றி அடைந்தது. இதேபோல், சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை படம் இரண்டு பாகங்களாக வெளிவந்தது. தற்போது அதன் மூன்றாவது பாகத்தை சுந்தர் சி இயக்கி வருகிறார்.

சென்னை-28 மூன்றாம் பாகம்?

இதேபோல் வடசென்னை படம் எடுக்கப்படும்போது அதன் இரண்டாம் பாகம் உள்ளது என்ற தகவல் வெளிவந்தது. அந்த வரிசையில், வெங்கட் பிரபு 2007 ஆம் ஆண்டு வெளியான தன்னுடைய சென்னை-28 படத்தின் மூன்றாவது பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருகிறார். சூழ்நிலைகள் சரியாக அமைந்தால் சென்னை 28 மூன்றாம் பாகம் உருவாக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சென்னை-28 படத்தின் இரண்டாம் பாகம் 2016ஆம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இயக்குனர்கள் நம்பிக்கை

தமிழ் சினிமாவை பொருத்தவரை இரண்டாம் பாகம் எடுப்பது என்பது முன்பெல்லாம் அதிகமாக இருந்தது இல்லை. ஆனால் சிங்கம் இரண்டாம் பாகத்தின் வெற்றி ஒரு படத்தின் இரண்டாம் பாகமும் வெற்றிப்படமாக அமையும் என்ற நம்பிக்கையை இயக்குனர்களுக்கு கொடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here