ஹீரோக்களை போல் ஹீரோயின்களும் ஏன் அதிக சம்பளம் வாங்கக்கூடாது என நடிகை தமன்னா கேள்வி எழுப்பியுள்ளார்.

சம்பளப் பிரச்சனை

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை தமன்னா. இவரை தெலுங்கில் ரவிதேஜா படத்தில் நடிக்க அணுகிய போது, அந்த படத்தில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதாகவும், அந்த தொகையை கொடுக்க தயாரிப்பு நிறுவனம் மறுத்துவிட்டதால் தமன்னா அப்படத்திலிருந்து விலகியதாகவும் செய்திகள் பரவின.

தமன்னா கேள்வி

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை தமன்னா, ரவிதேஜாவுடன் எனக்கு நல்ல நட்பு உள்ளது. எனவே அவரது படத்தில் நான் நடிக்க மாட்டேன் என்று சொல்வதற்கு வாய்ப்பில்லை என தெரிவித்திருக்கிறார். இதுமட்டுமன்றி நடிகைகளின் சம்பளம் குறித்து மட்டும் ஏன் எப்போதும் சர்ச்சைகள் உருவாகி வருகின்றன என்றும் அவர் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நடிகைகளின் தனிப்பட்ட விஷயம்

சம்பளம் என்பது நடிகைகளின் தனிப்பட்ட விஷயம். இது ஆண் நடிகராக இருந்தாலும் பெண் நடிகையாக இருந்தாலும் அவரவர் விருப்பத்தை பொருத்தது. நடிகைகள் தங்கள் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடித்துக் கொடுக்க வேண்டும் என்று பேசுவது ஏற்புடையது அல்ல. அது ஒருதலை பட்சமானது என்று தமன்னா கூறியிருக்கிறார். சம்பளத்தை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஏன் தயாரிப்பு நிறுவனங்கள் பெரிய நடிகர்களிடம் கேட்பது இல்லை. மாறாக நடிகைகளிடம் மட்டும் கேட்கின்றன என்ற கேள்வியையும் அவர் முன்வைத்திருக்கிறார்.

கதாநாயகியும் முக்கியம்

ஒரு படத்தில் நடிப்பதற்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்பது சம்பந்தப்பட்ட நடிகர் அல்லது நடிகையின் விருப்பம் சார்ந்தது. அதனை ஏற்பதும் ஏற்காததும் அவரவர் விருப்பத்தை பொறுத்தது. அதுமட்டுமின்றி கதாநாயகனை போலவே கதாநாயகியும் ஒரு திரைப்படத்திற்கு அவசியம் என்ற நிலையில், ஏன் கதாநாயகிகள் மட்டும் அதிக சம்பளம் வாங்கக் கூடாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடரும் குற்றச்சாட்டு

பல கதாநாயகிகள் சினிமா நிகழ்ச்சிகளில் புரொமோஷன்களுக்கு வருவதில்லை, அதிகமாக சம்பளம் கேட்கிறார்கள், உதவியாளர்களுக்கு அதிக பணம் கேட்கிறார்கள், தயாரிப்பாளர்களுக்கு அதிக செலவு வைக்கிறார்கள் என்பது போன்ற குற்றச்சாட்டுகள் திரைப்படத்துறையில் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நடிகைகளின் சம்பளம் என்பது அவரவர் தனிப்பட்ட விஷயம் என்று தமன்னா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here