மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி, மின்னல்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது; “தமிழகத்தில் பொதுவாக ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரியில் லேசான மழை பதிவாகியுள்ளது. காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. இதனிடையே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கனமழை

இன்று வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் சேலம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மிதமான மழை

நாளை மறுதினம் (சனிக்கிழமை) தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

மழைக்கு வாய்ப்பு

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 – 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 – 26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

மன்னார் வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்”. இவ்வாறு வானிலை ஆய்வு மைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here