டோவினோ தாமஸ் நடிப்பில் ‘2018’ படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் நடிகர் சிம்பு இணையவுள்ளதாக தகவல் வெளியாயுள்ளது.
விறு விறு படப்பிடிப்பு
நடிகர் சிம்பு தற்போது கமல் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ‘தக் லைஃப்’ படத்திற்கு பிறகு தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு தனது அடுத்த படத்தை மலையாள இயக்குநருடன் கைகோர்க்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இணையும் புதிய கூட்டணி
கடந்த ஆண்டு, டோவினோ தாமஸ் நடிப்பில் ‘2018’ படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்புடன் சிம்பு இணையவுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. கடந்த ஆண்டு மலையாள சினிமாவிலேயே அதிகமாக வசூல் சாதனை செய்த படமான ‘2018’ படம் மக்களிடையே பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் இயக்குநர் ஜூன் ஆண்டனி ஜோசப், சிம்புவை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன் லால் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.