கடலூரில் டாஸ்மாக் சார்பில் மதுப்பிரியர்களுக்கு வழங்கப்பட்ட டோக்கன்களை கலர் ஜெராக்ஸ் எடுத்து மதுவாங்க வந்த இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
டாஸ்மாக் திறப்பு
டாஸ்மாக் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகள், தொற்று ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகள் தவிர பிற இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
வண்ண டோக்கன்
கடைகளில் கூட்டம் கூடுவதை தவிர்ப்பதற்காக சிவப்பு, மஞ்சள், பச்சை உள்ளிட்ட 7 வண்ணங்களில் டோக்கன்கள் வழங்கப்பட்டது. டோக்கன் வாங்குவதற்காக காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு குடிமகன்கள் குவிந்தனர். அவர்களுக்கு உடனுக்குடன் டோக்கன் வழங்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குவிந்த குடிமகன்கள்
கடலூரில் காலை 7 மணி மணிக்கே மது பிரியர்கள் டாஸ்மாக் கடை முன்பு குவிந்தனர். அவர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் 500 டோக்கன்கள் வழங்கப்பட்டது.
கலர் ஜெராக்ஸ், கைது
டோக்கன் வழங்கப்பட்ட அடுத்த சில நிமிடங்களில் மது பிரியர்கள் போலி டோக்கன்கள் அச்சடித்து மது வாங்க வந்தனர். இதனை அறிந்த காவல்துறையினர் 10க்கும் மேற்பட்ட இளைஞர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். டோக்கன்கள் எங்கு அச்சிடப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.